2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். தொடர்ந்து சக்கரம், சத்ரபதி, பவுர்ணமி, யோகி, முன்னா, பில்லா, டார்லிங், மிர்ச்சின் எனப் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ‘சத்ரபதி’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ராஜமௌலி. அந்தத் திரைப்படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரபாஸ் தமிழகத்துக்குத் தெரிந்த முகமாக மாறினார். ‘சத்ரபதி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான், விஜய் நடித்த ‘குருவி’ திரைப்படமாகும். இதைத்தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி – பிரபாஸ் கூட்டணியில் மிகப் பிரமாண்டமாக உருவான திரைப்படம் ‘பாகுபலி’. இதன் முதல்பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் பிரபாஸ். தற்போது ‘பாகுபலி 2’ வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார்.
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களுக்காக சுமார் ஐந்து வருடங்கள் வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகர் பிரபாஸ், தற்போது மீண்டும் பிரமாண்டமாக தயாராகி வரும் ஒரு மும்மொழி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘சாஹூ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வித்தியாசமான கதைகளத்திலும், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். பிரமாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும், காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்து இந்தப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸின் இமேஜ் இந்திய அளவில் உயர்ந்துள்ளதால் அவரது அடுத்தப் படத்தை பாகுபலியை விட அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் திருப்தியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சாஹூ’ திரைப்படத்தை இயக்குநர் சுஜீத் இயக்குகிறார். தயாரிப்பு வம்சி மற்றும் பிரமோத். இத்திரைப்படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் இடைவேளை சமயத்தில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி 2 திரைப்படத்தின் நடுவே திரையிடப்படவிருக்கும் இந்த டீசர் ரசிகர்களை வியக்க வைக்கும் விதத்தில் அமைந்துவிட்டால், அதன்பின் அந்தத் திரைப்படத்தின் வெற்றியைக்கண்டு வியக்கத் தேவையில்லை.�,”