கேரளாவில் 51 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் கோவளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளார். அவர் மீது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் எம்.எல்.ஏ. வின்சென்ட் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 51 வயது பெண்ணை விசாரித்த போலீசார், எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று(22-07-2017) மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதற்கிடையே வின்சென்ட்டிற்கு எதிராக ஆவணங்களை போலீஸ் சேகரித்தது, 5 மணி நேரம் அவரிடம் விசாரித்த போலீஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் பின்தொடர்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது. ஏற்கனவே மாநில அரசு மூத்த போலீஸ் அதிகாரியை விசாரணை குழு தலைவராக நியமனம் செய்து இருந்தது. கேரள மாநில சபாநாயகர் அலுவலகம் ஏற்கனவே போலீஸுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டது. இவ்வழக்கில் போலீஸ் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கலாம் என கூறிவிட்டது. இந்நிலையில் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.இதையடுத்து வின்சென்ட், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.�,