�
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் உளவு விமானம் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசியது. அதுமுதல் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவு விமானம் இன்று அதிகாலையில் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் நுழைய முயன்றதாகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை விரட்டியடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் *இந்தோ-ஏசியன் நியூஸ்* ஊடகத்திடம் கூறுகையில், “ஸ்ரீகங்காநகர் அருகே உள்ள ஹிந்துமால்கோட் பகுதியில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் உளவு விமானம் (ட்ரோன்) இன்று காலை 5.00 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை இதை உடனடியாகக் கண்டுபிடித்து அதனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அந்த ட்ரோன் திரும்ப பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டது” என்றார்.
அப்பகுதியிலிருந்து மேற்கு எல்லையில் உள்ள கிராம மக்கள் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தத்தை உணர்ந்ததாகவும் இந்தோ ஆசியன் நியூஸ் சர்வீஸ் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் உளவு விமானங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ள நிலையில், இன்று 3ஆவது உளவு விமானம் நுழைய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.�,