சூலூர் இடைத் தேர்தலை ரத்துசெய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாளை மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 4 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்ததையடுத்து, தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் சூலூர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள மனுவில், “சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் 17ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்துத் தருவோம் என்று ஏற்கனவே வாய்மொழியாக உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அற்பமான காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சூலூரில் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அப்பகுதி பதற்றமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால் ஏன் இடைத் தேர்தல் நடத்த வேண்டும்? ஆகவே சூலூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மனுவில் எங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிதான் இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவை சந்தித்தும் அருணாச்சலம் அளித்தார்.
முன்னதாக அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் கருத்து தேசிய அளவில் சர்ச்சையையும் விவாதத்தையும் உண்டாக்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி பகுதியிலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை நோக்கி செருப்பு, முட்டை உள்ளிட்டவை வீசப்பட்டன. இதனையடுத்து சூலூரில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் நேற்று காலையே சென்னை திரும்பினார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”