mதேர்தல் நேரம் – மதவாதக் களம் – மக்கள் மனம்!

Published On:

| By Balaji

அ. குமரேசன்

இந்திய நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவையை அமைப்பதற்கான தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி நாளேடுகளிலும் இணையதள இதழ்களிலும் வெளியாகிற பல்வேறு கட்டுரையாளர்களின் எழுத்துகளைப் படிக்கிறபோது மிகத் தெளிவாக இரண்டு வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது.

**வளர்ச்சி முழக்கம்**

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று எழுதுவோரின் வாதங்கள் பெரும்பாலும் “வளர்ச்சி” என்பதையொட்டியே அமைந்திருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் வீணானவையல்ல, அந்தக் குழுமங்களின் வளர்ச்சியால் அவற்றைச் சார்ந்த பலவகையான துணைத் தொழில்கள் வளர்கின்றன, இதனால் வேலை வாய்ப்புகள் வளர்கின்றன, ஏற்றுமதிகள் வளர்கின்றன, மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட விகிதங்கள் வளர்கின்றன, ஆதார் போன்ற திட்டங்களால் பொதுவிநியோக முறைகேடுகள் தடுக்கப்பட்டு உண்மை ஆதாயங்கள் வளர்கின்றன, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரசுக் கருவூலத்திற்கான மறைமுக வரி வருவாய் நிலவரங்கள் வளர்கின்றன, பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கைக்குப் பின் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் விரிவடைந்து இரட்டைக் கணக்குக்கு வழியின்றி வரி செலுத்துகிற வணிகக் கட்டமைப்புகள் வளர்கின்றன என்று வளர்த்துக்கொண்டே போகிறார்கள். தங்களின் வாதங்களுக்கு ஆதாரமாக, அரசாங்கப் புள்ளிவிவரங்களைத் தருகிறார்கள். ஊழலற்ற ஆட்சி என்பதால் மக்கள் பணம் மக்களுக்கான திட்டங்களுக்கே முழுமையாகச் செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

**நல்லிணக்கம் குறித்த கரிசனம்**

இந்த ஆட்சி இனியும் தொடரக் கூடாது, இந்தத் தேர்தலோடு விடைகொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்று எழுதுகிறவர்களின் வாதங்களில் சுதந்திர இந்தியாவின் அடித்தளமாகிய ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய இரண்டையும் பற்றிய கவலைகளும், இவ்விரண்டும் பாதுகாக்கப்படுவது பற்றிய அக்கறைகளும் மேலோங்கியிருப்பதைக் காணலாம். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த இரண்டுக்குமான அச்சுறுத்தல்கள் வளர்ந்திருக்கின்றன, மதச் சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்கள் வளர்ந்திருக்கின்றன, மதங்களைக் கடந்த நல்லிணக்கத்திற்கு எதிரான அவமதிப்புகள் வளர்ந்திருக்கின்றன, நாட்டின் மிக முக்கியமான பெருமையாகிய பன்முகப் பண்பாடுகளைச் சிதைக்கும் வன்மங்கள் வளர்ந்திருக்கின்றன, சிறுபான்மை மக்களின் மனங்களில் தாங்கள் ஒதுக்கப்படுவது பற்றிய அச்சங்கள் வளர்ந்திருக்கின்றன, இந்திய ஒன்றியமாக இணைந்துள்ள மாநிலங்களை ஓரங்கட்டும் உரிமை மீறல்கள் வளர்ந்திருக்கின்றன, மொழித்திணிப்பு உள்ளிட்ட அடாவடிகள் வளர்ந்திருக்கின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வரலாற்றில் இடம்பெற்ற ஊர்களின் பெயர்களை மாற்றுவதன் மூலமாகவும் இங்கே மதப்பகைமை வளர்க்கப்படுவது பற்றியும், சிறுபான்மை மக்களின் உணர்வுகள் சிறுமைப்படுத்தப்படுவது பற்றியும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அரசியலுக்காகக் கடத்தப்படுவது பற்றியும் எடுத்துக்காட்டுகிறார்கள். இன்னொரு ஐந்தாண்டு ஆட்சி வாய்ப்பை ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் முகமாகிய பாஜக கைப்பற்ற விட்டுவிட்டால் இனி சரி செய்யவே முடியாத அளவுக்கு, அல்லது சரி செய்வதற்கு நெடுங்காலம் ஆகிவிடும் என்கிற அளவுக்கு, பாசிசத்தின் இந்திய வார்ப்பு கெட்டிப்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

முதலில் குறிப்பிட்ட வளர்ச்சிவாதிகள் மதவெறி, வகுப்புவாதம், பண்பாட்டுத் தள ஆக்கிரமிப்பு, மொழித்திணிப்பு ஆகியவற்றைப் பற்றி எழுதுவது மிகக் குறைவு அல்லது எழுதுவதே இல்லை. அப்படியே எழுதினாலும் இவற்றின் கட்டளைதாரர்களுக்கு வலித்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும். மாட்டுக்கறி வெறுப்பரசியலைக் கையிலெடுத்து அடித்தே கொல்கிற கொடுமைகளில் ஈடுபட்டவர்கள் ஏதோ சில பொறுப்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். மிஞ்சிமிஞ்சிப் போனால் அந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என மயிலிறகால் தடவி அங்கலாய்க்கப்பட்டிருக்கும். சிலர், வளர்ச்சி நடவடிக்கைகள் முழுமையாகக் கனிகிறபோது இப்படிப்பட்ட குறுகிய உணர்வுகள் வற்றிச் சுருங்கிவிடும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், முந்தைய ஆட்சியில் வகுப்புவாத வன்முறைகள் நடந்ததில்லையா என்று காலண்டரின் பழைய தேதிகளைத் தேடுவார்கள்.

ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது “சமூக ஆர்வலர்” எனப்பட்ட ஒருவர், “பாஜக ஆட்சிக்கு வருகிறபோதெல்லாம் வகுப்புக் கலவரங்கள் குறைவாகவே நடக்கின்றன, அது எப்படி சாத்தியமாகிறது,” என்று கேட்டார். “அப்படியானால் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தால் வகுப்புக் கலவரங்கள் அதிகம் நடப்பதாக அர்த்தமா,” என்று திருப்பிக் கேட்டபோது அதை எதிர்பார்க்காத அவர் பதில் சொல்வதற்குப் பதிலாகக் கோப வெப்பத்தின் துணையை நாடினார். சூழலைக் குளிர்ச்சிப்படுத்துவதற்கு விளம்பர இடைவேளை ஒன்று தேவைப்பட்டது.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட நல்லிணக்கவாதிகள் பொருளாதார நிலைமை, வளர்ச்சி வாதம், நிதி நிர்வாகம், உலக வணிகம் பற்றியெல்லாம் எழுதுகிறார்கள்தான். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தக் களங்களில் எவ்வித முன்னேற்றமும் உண்மையாக நடந்ததில்லை என்று வாதிட்டு, அதற்கு ஆதாரமாக அரசாங்க அமைப்புகளின் அதிகாரபூர்வ அறிக்கைகளிலிருந்தே எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார்கள்.

**காங்கிரஸும் இடதுசாரிகளும்**

தொலைக்காட்சி வாதங்களில் காங்கிரஸ் தரப்பிலிருந்து வருகிறவர்கள் ஆதார், மானிய ஒழிப்பு, சந்தையிடம் ஒப்படிக்கப்பட்ட பெட்ரோலிய விலை நிர்ணயம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இதெல்லாம் “உங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்டவைதானே,” என்று பாஜக பிரதிநிதிகள் கேட்பார்கள். “நீங்கள் கொண்டுவந்த கொள்கைகளைகளை உங்களை விட வேகமாகவும் மூர்க்கமாகவும் இவர்கள் செயல்படுத்துகிறார்கள் என்பதுதானே வேறுபாடு? முந்தைய ஆட்சியின் இப்படிப்பட்ட செயல்பாடுகளால் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத்தானே இவர்கள் தங்களுக்கான அரசியல் ஆதாயமாக அறுவடை செய்தார்கள்?…” என்று கேட்டபோது, “நாங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கான கவசங்களோடு கொண்டுவந்தோம், இவர்கள் அந்தக் கவசங்களைக் கழற்றிவிட்டார்கள்,” என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார்கள்.

கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் சார்ந்த, எந்தவொரு இயக்கமும் சாராத இடதுசாரிக் கருத்தாளர்கள் பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் என மூன்றிலுமே சமுதாய ஏற்றத்தாழ்வுகள் தொடரச் செய்யும் பொருளாதாரப் பிரச்சினைகள், மக்களைப் பிரித்துப் பகை வளர்க்கும் வகுப்புவாதப் பிரச்சினைகள் இரண்டையும் கூர்மையாக விமர்சித்துவந்திருக்கிறார்கள். ஆனால், விலை உயர்வு, மானிய வெட்டு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளில் உடனடியாக எதிர்வினையாற்றுகிற வேகத்தில், சாதிய ஒடுக்குமுறை, மொழித் திணிப்பு போன்ற பண்பாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லையே என்ற விமர்சனம் அவர்கள் மீதும் வந்ததுண்டு. ஆனால், அவற்ளைக் கையிலெடுக்கத் தொடங்கிய பிறகு கருத்து, செயல் ஆகிய இரண்டு களங்களிலும் அவர்கள் முழு விசுவாசத்தோடு ஈடுபடுகிறார்கள் என்பதைப் பெரும்பாலும் யாரும் மறுப்பதில்லை.

ஆக, வளர்ச்சி வண்ணம் பூசுகிறவர்கள் வன்முறைக் கறைகளை மறைக்கிறார்கள், வகுப்புவாதப் பள்ளங்கள் பற்றி எச்சரிக்கிறவர்கள் பொருளாதாரப் பாறைகளில் முட்டிக்கொள்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகள், விவசாயத் துயரங்கள், நடுத்தர – சிறு – குறு தொழில் முடக்கங்கள், அம்பலமாகத் தொடங்கியிருக்கும் அனைத்துத் துறை ஊழல்கள் ஆகியவை பற்றி புள்ளிவிவரத் தடயங்களோடு பேசுகிற எதிர்க்கட்சிகள், அவற்றை விட மோசமான இந்துத்துவ ஆக்கிரமிப்புகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கத் தவறுகிறார்கள் என்ற ஆதங்கச் சாடல்களும் வருகின்றன. பொருளாதாரக் கொள்கைச் சித்திரங்களைத் தீட்டுவதற்கான மதச்சார்பின்மைச் சுவர் இடித்துத் தகர்க்கப்படுவது பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல என்ன தயக்கம் என்ற கேள்விகளும் வருகின்றன.

**விரிசல் விழும் மதச்சார்பின்மைச் சுவர்**

பெரும்பான்மை மக்களின் மனங்களில் அரசமைப்பு சாசன அடிப்படைகள் மீறப்படுவது பற்றிய கேள்வியே முளைவிடாத வண்ணம் அவர்களது மதப்பற்றின் பெயரால் இந்தத் தகர்ப்புக் கரசேவைகள் நடத்தப்படுகின்றன. பல மடங்கு விசனத்திற்கும் வெஞ்சினத்திற்கும் உரிய இந்த நிலவரம் குறித்தும், அதிலிருந்து நாட்டை மீட்கிற வழிமுறை குறித்தும் மதச்சார்பின்மைக்காக வாதாடுகிற அரசியல் கட்சிகள் ஆழ்ந்த அக்கறை கொள்வது வரலாற்றில் ஒரு கட்டாயத் தேவையாக உருவெடுத்திருக்கிறது. அந்தச் சுவரை விரிசல் விழாமல் பாதுகாத்தால்தான் ஜனநாயகம், பொருளாதாரம், வளர்ச்சி, ஊழலின்மை, கல்வி, மருத்துவம் என எந்தவொரு சித்திரத்தையும் வரைய முடியும்.

இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதற்கு அடிப்படையாக இருப்பது எது? மக்கள் மனநிலை!

தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக வளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறீர்களா என்று நெறியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். “ஆம், அச்சம் இருப்பது உண்மைதான். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று வள்ளுவன் எச்சரித்த வழியில் ஏற்படும் அச்சம் இது. அரசியலுக்காக மதவாதத்தைப் பயன்படுத்துகிற கட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பாஜக உண்மையிலேயே மாறுபட்ட கட்சிதான்; அது மதவாதத்திற்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி,” என்று சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு அச்சம் கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது எது? மக்கள் மனநிலை!

அது என்ன மனநிலை? அது முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி மாறியிருக்கிறது?

மக்களைக் குறை சொல்வதற்காக அல்ல, மக்களின் மனசாட்சியோடு உரையாடுவதற்கான இந்தக் கேள்விகள் தேர்தல் நேரத்தில் முக்கியமானவையாக முன்னுக்கு வந்து நிற்கின்றன. பின்தொடர்ந்து செல்வோமே…

(தொடரும்)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share