தேவிபாரதி
சினிமா பாரடைசோ: தமிழ் சினிமாவின் வாயிலாகச் சமூகத்தை அணுகும் தொடர் – 3
கஸ்பா பேட்டைக்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவல்பூந்துறையில்தான் முதன்முதலில் டூரிங் டாக்கீஸ் வந்தது. முதல் நாளின் முதல் காட்சியில் கந்தன் கருணை. வெற்றியைத் தேடித்தரக் கந்தனின் கருணையை வேண்டுவதற்காகத் திரையிடப்பட்ட அந்தப் படம் மூன்று நாள்களோ நான்கு நாள்களோ ஓடியது. ஐந்தாம் நாளில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தைத் திரையிட்டுவிட்டார்கள். எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த அந்தப் படம் எம்.ஜி.ஆரைவிடப் புகழ் பெற்றது. அதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே அந்தப் படத்தைப் பற்றிய கதைகள் கிராமங்களில் உலவிக்கொண்டிருந்தன.
ரிலீஸ் ஆனபோதே ஈரோடு ராஜாராம் தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்த இரண்டு கஸ்பாபேட்டைவாசிகள் ஊரார் எல்லோருக்கும் ஒலிச்சித்திரத்தின் வடிவில் கதை, வசனம், பின்னணி இசை, பாடல்களோடு அலிபாபாவைப் பற்றியும் நாற்பது திருடர்களைப் பற்றியும் அவர்களது குகையைப் பற்றியும் குகையைத் திறப்பதற்கான *அண்டா காகுசம், அபூ காகுசம், திறந்திடு சீசே* என்னும் மந்திரச் சொல்லைப் பற்றியும் சொல்லியிருந்தார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்த இருவரில் ஒருவர் அந்தக் கதையைச் சொல்வதற்குத் தன் கற்பனா சக்தி முழுவதையும் பயன்படுத்தியிருந்தார். அவரது கற்பனையில் திரையில் காட்டப்பட்டதையும் விட சுவாரஸ்யமான கதை ஊர்க்காரர்களுக்குக் கிடைத்திருந்தது. அலிபாபாவால் பீப்பாய்களில் அடைத்து அருவியில் தள்ளிவிடப்பட்ட வீரப்பாவின் ஆட்கள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து மீண்டும் மீண்டும் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு அருவியில் தள்ளிவிடப்படுவார்கள். மற்றொருவர் படத்தில் இடம்பெற்றிருந்த மிகப் புகழ் பெற்ற பாடலான அழகான பொண்ணுதான், அதுக்கேத்த கண்ணுதான், எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான் என்னும் பாடலை அப்படியே அச்சு அசலான பெண் குரலில் பாடிக்காட்டுவார். யாராவது பானையைக் கொண்டு அதற்கேற்றாற்போல் தாளமும் போடுவார்கள். நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஆசையாக, ஏக்கமாக ஊராரின் மனங்களில் விரிந்து கிடந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் அவல்பூந்துறை டூரிங் டாக்கீசில் திரையிடப்பட்டது கஸ்பாபேட்டையின் வரலாற்றில் அழியாமல் இடம்பெற்றுவிட்ட நிகழ்வு எனச் சொல்லலாம்.
இரட்டை மாட்டு வண்டியிலோ கால்நடையாகவோ மூன்று கிலோமீட்டர் தூரத்தை மிக எளிதாகக் கடந்து அவல்பூந்துறையை அடைந்து திரும்பத் திரும்ப எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற அந்தத் திரைக் காவியத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். படம் இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியது. டென்ட் கொட்டகைகளின் வரலாற்றில் ஒரு படம் அவ்வளவு நாள்கள் ஓடுவதென்பது அபூர்வம். பார்த்தவர்கள் படத்தைப் பற்றி இன்னும் பார்க்காத மற்றவர்களுக்குச் சொன்னார்கள். எம்.ஜி.ஆரின் வீரம், பானுமதியின் அழகு, பி.எஸ்.வீரப்பாவின் சூழ்ச்சி, டணால் தங்கவேலுவின் நகைச்சுவை, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் பரிதாபமான மரணம் என அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் அத்துபடியாகியிருந்தது. தங்களுக்கு முடிந்த விதத்தில் அதன் பாடல்களைப் பாடிக்காட்டினார்கள். அப்போதைய மொடவாண்டி சத்தியமங்கலத்தின் ஊராட்சித் தலைவர் பி.கே.நாச்சிமுத்துக் கவுண்டரின் வீட்டில் ஒரு இசைத்தட்டுக் கருவி இருந்தது. அதில் அலிபாபா நாற்பது திருடர்கள் படத்தின் பாடல்களை ஒலிக்கச் செய்து ஊரார் எல்லோரையும் கேட்கச் செய்தார்கள்.
அடுத்தாக ஒரு எஸ்.எஸ்.ஆர் அல்லது ஜெமினியின் படம். எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜியின் புகழ்பெற்ற இரண்டு திரைப்படங்களுக்கிடையே பார்வையாளர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகவே அதுபோன்ற படங்களைத் திரையிடுவார்கள். இரண்டு நாட்களோ மூன்று நாட்களோதான் அவற்றுக்கான ஆயுள். வார நாள்களில் அப்படி இரண்டு மூன்று படங்களைத் திரையிட்டுவிடுவார்கள். இது தவிர பெட்டி வந்து சேரவில்லையென்றால் திரையிடப்படுவதற்கென்றே சில படங்களையும் கைவசம் வைத்திருப்பார்கள். ஞானசௌந்தரி, தை பிறந்தால் வழி பிறக்கும், மர்மயோகி, சிவகவி, மனம்போல் மாங்கல்யம், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி பூலோக ரம்பை, பானை பிடித்தவள் பாக்கியசாலி போன்ற நாற்பது ஐம்பதுகளில் வந்த பழைய படங்கள். சில சமயங்களில் அந்தப் படங்களில் ஏதாவது ஒன்று பார்வையாளர்களின் மனத்தைக் கவர்ந்து நான்கைந்து நாள்கள் வரை ஓடுவதும் நடக்கும். ஆனால் கஸ்பாப்பேட்டை வாசிகளின் இதயம் கவர்ந்த நாயகர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும்தான்.
சிவாஜி நடித்த பராசக்தி, மனோகரா, தங்கமலை ரகசியம், பாசமலர், பாவமன்னிப்பு, படிக்காத மேதை, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களையும் எம்.ஜி.ஆரின் குலேபகாவலி, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா, புதுமைப்பித்தன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன், முதலான தமிழ் சினிமாவின் அழியாக் காவியங்களாக இடம்பெறச் செய்தவை இந்த டென்ட் கொட்டகைகள். அவை, ரஜினியும் கமலும் கோலோச்சத் தொடங்கிய காலம் வரை ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் வசூலை வாரிக் குவித்தவை. டென்ட் கொட்டகைகளில் சீரான இடைவெளிகளில் அவை திரையிடப்பட்டுக்கொண்டே இருந்தன. ரசிகர்களால் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டன. படிக்காத மேதையையும் பாவமன்னிப்பையும் பார்த்துத் தமிழ்ப் பெண்கள் கண்ணீர் வடித்தார்கள். மற்றவர்கள் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து, அவரது தத்துவப் பாடல்களைக் கேட்டு அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள்.
தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீற்றுக்களால் ஆன கூரைகள், சுற்றுப்படல்கள், நுழைவாயில்கள். ஆபரேட்டர் அறையும் திரைச் சீலை கட்டப்பட்டுள்ள சுவரும் மண்ணால் கட்டப்பட்டவை. தரை, பெஞ்ச், பேக் பெஞ்ச் என மூன்று வகுப்புகள். பின்னாட்களில் சேர் என நான்காவதாக ஒரு வகுப்பும் வந்தது. பேக் பெஞ்ச் நடுத்தர வர்க்கத்தினருக்கான வகுப்பு. சேர் உயர் வகுப்பு ரசிகர்களுக்கானவை. தரை திரைக்கு எதிரே முதலாவதாக இருக்கும். மணல் பரப்பப்பட்ட தரை. மழை வந்தால் நான்கில் எந்த வகுப்பும் தப்ப முடியாது. சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே படத்தை ரசிக்க வேண்டியிருக்கும்.
தமிழ் சினிமாவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவை டென்ட் கொட்டகைகள்தாம். அவை தமிழகத்தின் கோடிக்கணக்கான எளிய மனிதர்களுக்குத் திரைப்படத்தைக் கொண்டு சேர்த்தன, அதற்கான ரசிகர்களை உருவாக்கின, அவர்களது ரசனையை வளர்த்தெடுத்தன.
1930களிலிருந்து ஏறத்தாழக் கால் நூற்றாண்டு காலம் வரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் பலவற்றை இப்போதைய திரைப்படப் பார்வையாளர்களால் பார்க்கவே முடியாது. பல முற்றாக அழிந்துவிட்டன. அவற்றைப் பாதுகாப்பதற்கான திரைப்பட ஆவணக் காப்பகங்களும் இல்லை. திரைப்பட வரலாற்றாசிரியர்களின் பார்வைக்குச் சிக்காமல் மறைந்துவிட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம். 1951இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமொன்றின் பெயர் ஸ்தீரி சாகசம். அந்தப் படத்தின் கதையையோ படம் முன்னிறுத்திய வாழ்வையோ கருத்தையோ இப்போது எப்படிக் கற்பனை செய்ய முடியும்? அதே ஆண்டில் வெளிவந்த மற்றொரு படத்தின் பெயர் காதல். 1952இல் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் பெயர் அழகி. இரண்டாயிரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் அதே தலைப்பில் வெளிவந்த தமிழின் வெற்றிகரமான இரண்டு திரைப்படங்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க யாராவது கிறுக்குப் பிடித்த திரைப்பட ஆய்வாளர் விரும்பலாம், அந்தத் திரைப்படங்கள் அழிந்துவிட்ட நிலையில் அந்தத் திரைப்பட ஆய்வாளரின் விருப்பம் நிறைவேற வழியே இல்லை.
1980களில் நிரந்தரத் திரையரங்கங்கள் பெருகிய காலம் வரை டூரிங் டாக்கீஸ்கள் தமிழின் தொடக்க காலத் திரைப்படங்கள் பலவற்றைத் திரையிட்டன.
டூரிங் டாக்கீஸ்களில் சாதாரணமாக தினசரி இரண்டு காட்சிகள்தாம். சனி ஞாயிறுகளில் தை பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளி முதலான பண்டிகை நாள்களில் மூன்று காட்சிகள். அபூர்வமாக நான்கு காட்சிகள்கூடத் திரையிடப்படுவதுண்டு. பகல் காட்சிகளைப் பார்க்க பார்வையாளர் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கும். கீற்றுத் தடுப்பான்களால் இருட்டைப் போதிய அளவுக்குப் பாதுகாக்க முடியாது. புறத்திலிருந்து வரும் ஒளியால் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளிறிப்போய்விடும். பிரின்ட் மோசமாக இருந்தால் திரையில் கோடுகள் தெரியும். ப்ரஜெக்டர் பழுதாகிவிடும், கார்பன் தீர்ந்துபோய்விடும், அதுபோன்ற சமயங்களில் படம்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் அடிக்கும் விசில் சத்தம் ஊர் எல்லைக்கப்பால் வரை எதிரொலிப்பதுண்டு. இதுபோன்ற குறைகளைக் கடந்து மக்கள் டென்ட் கொட்டகைகளை நேசித்தார்கள்.
பூந்துறைக்கு டூரிங் டாக்கீஸ் வந்த அதே ஆண்டில் கஸ்பாப்பேட்டைக்கு தேநீர்க் கடை ஒன்றும் வந்தது எங்களுடைய கிராமத்தின் திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்த நற்பேறுகளில் ஒன்று எனச் சொல்லலாம். பூந்துறையின் டென்ட் கொட்டகையும் பேட்டையின் தேநீர்க் கடையும் ஒன்றோடொன்று உறவு கொண்டு ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உறுதுணையாகவும் இருந்தன.
டென்ட் கொட்டகைகளின் விளம்பரத் தூதர்களாகச் செயல்பட்டவர்கள் டீக்கடைக்காரர்கள். டென்ட் கொட்டைகைகளின் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அதைச் சுற்றியுள்ள ஏழெட்டுக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள். கொட்டகையில் என்ன படம் திரையிடப்பட்டிருக்கிறது என்பதை அறிவிக்கும் சுவரொட்டிகளைப் பெரும்பாலும் தேநீர்க் கடைகளில்தான் ஒட்டுவார்கள். அதற்காக தேநீர்க் கடைகளின் வாசல்களில் அதன் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும் விதத்தில் மூங்கில் தட்டி ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். அதில் ஒட்டப்படும் போஸ்டர்களைப் பார்த்தே அன்று திரையிடப்பட்டிருக்கும் படம் எது என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அந்தத் தட்டியைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்காக சம்பந்தப்பட்ட தேநீர்க் கடை உரிமையாளருக்குத் தட்டிப் பாஸ் ஒன்றைக் கொடுப்பார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு அவரால் இலவசமாகப் படம் பார்க்க முடியும்.
(தொடரும்)
[பகுதி 1](https://minnambalam.com/k/2018/11/07/7)
[பகுதி 2](https://minnambalam.com/k/2018/11/14/10)�,”