கடந்த சில தினங்களாக உலகத்தையே தாய்லாந்து பக்கம் திருப்பி இருந்த குகை சம்பவம், விரைவில் ஹாலிவுட்டில் திரைப்படமாக உள்ளது.
தாய்லாந்தில் 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்கள் அவர்களது 25வயது கால்பந்து பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங், உடன் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியிலுள்ள பல கிலோ மீட்டர் நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13பேரும் அதற்குள் சென்றுள்ளனர். திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்தது. அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர். எனினும் தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்காக ஜூலை 8,9,10 ஆகிய 3 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்றன. வெளிநாட்டுச் சிறப்பு நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் தாய்லாந்து கடல் அதிரடிப்படையினர் குகைக்குள் செவ்வாய்க் கிழமை நுழைந்தனர். இந்த மீட்பு நடவடிக்கையில் 13 பேரும் காப்பாற்றப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட கடல் அதிரடிப்படை வீரர் சமன் குனாட் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விரைவில் ஹாலிவுட்டில் திரைப்படமாக உருவாகவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் ஃபிளிக்ஸ் திரைப்பட நிறுவனம், இச் சம்பவத்தை திரைப்படமாக்க முடிவெடுத்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் இதுகுறித்து ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்துள்ள ஸ்காட், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் அதிரடிப்படை முன்னாள் வீரர் குனாட், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தது தன்னை தனிப்பட்ட முறையில் பாதித்ததாக கூறியுள்ளார். மரணமடைந்த குனாடும், தயாரிப்பாளர் ஸ்காட்டின் மனைவியும் பள்ளிக்காலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள். இந்தப் படத்துக்காக அதிகபட்சமாக ரூ.413கோடி வரை (60 மில்லியன் டாலர்) செலவழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.�,