mஜெ. சொத்துக்கள்: நிர்வகிக்கப் போவது யார்?

Published On:

| By Balaji

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து , அவரது சொத்துக்களை யாருக்கும் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்த வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று (நவம்பர் 15) நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பில் அந்தச் சொத்துக்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மேலும், ஜெயலலிதா அண்ணன் வாரிசுகள் என தீபா மற்றும் தீபக் ஆகிய இருவர் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை யார் நிர்வகிப்பது என்பது குறித்து இருவரும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share