அதிநவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளைத் தாங்கிக்கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 விண்கலம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனும் இஸ்ரோவானது, அதிநவீனத் தகவல் தொடர்பு வசதிகளைச் செயல்படுத்தக்கூடிய ஜிசாட்-29 எனும் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. இது 3,423 கிலோ எடை கொண்டது. இதற்கு முன்னர், இவ்வளவு எடை கொண்ட செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை; விண்ணில் செலுத்தப்படவில்லை. அதிநவீனத் திறன் கொண்ட தகவல் தொழில்நுட்பம், அடர்ந்த காடுகளில் தகவல் தொடர்பை மேம்படுத்துவது உள்ளிட்ட சேவைகளுக்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று (நவம்பர் 13) மாலை 3.30 மணிக்குத் தொடங்கியது.
இன்று (நவம்பர் 14) மாலை 5.08 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, திட்டமிட்டபடி இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதோடு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 67 விண்கலங்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ஏவப்படும் 5ஆவது விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 ஆகும்.
ஜிசாட்- 29 ஏவப்பட்ட பெருமை ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் சேரும் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன்.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 விண்கலம் ஜிசாட்- 29 செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்ததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இந்திய விண்கலத்தின் மூலமாக ஏவப்பட்டு, இரட்டை வெற்றிகளால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோடி.
இதன் மூலமாக, தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட 33வது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஜிசாட்- 29.
�,”