தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை வரவேற்றிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ‘ஆனால் களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்தக்கூடாது’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 20) அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ராமதாஸ். அதில், ’மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போலி மருத்துவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நம் விருப்பம். அவர்கள் உருவாவதற்கான காரணங்களை கண்டறிந்து, அகற்ற வேண்டியது அவசியம்’ என்றிருக்கிறார்.
“இந்த நடவடிக்கையின்போது, பாரம்பரிய சித்த மருத்துவர்களையும் போலி மருத்துவர்களாக சித்தரித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனும் கூறும் காரணங்கள் அபத்தக் களஞ்சியங்கள் ஆகும்.
சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்களாக கருதப்படுவார்கள் என்றும், பட்டம் பெறாத பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் என்றும் விஜயபாஸ்கர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் கூட சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்பட்ட வரலாறு உண்டு.
எழுதப் படிக்காதவர்கள் கூட சித்த மருத்துவத்தில் வல்லுனர்களாக உள்ளனர். அதேநேரத்தில் சில சித்த மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்துவதாகக் கூறி மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். பணம் பறிப்பது தான் இத்தகைய மருத்துவர்களின் நோக்கம் ஆகும்.
அதனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்ட பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலிகள் என்று முத்திரைக் குத்தக்கூடாது. சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை படித்து ஏட்டறிவின் அடிப்படையில் வழங்குகின்றனர்; பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பரம்பரை பரம்பரையாக கற்று அந்த அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவம் செய்கின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் இது தான் வித்தியாசமாகும். பாரம்பரிய சித்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அவர்களை போலி மருத்துவர்கள் என விமர்சிப்பது சித்த மருத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்.
மத்திய அரசால் கடந்த 1970-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் கவுன்சில் சட்டத்தின்படி, சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும் என்பது உண்மை. 1997-ஆம் ஆண்டு ஆற்காடு வீராசாமி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய அரசின் சட்டத்திலிருந்து பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சித்தமருத்துவ முறை (வளர்ச்சி மற்றும் மருத்துவர் பதிவு) சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அச்சட்டம் செல்லாது என 2009-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க இரு திராவிடக் கட்சிகளும் தவறியது தான் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.
சீனாவில் பாரம்பரிய மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்டு கிராமங்களில் மருத்துவம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேபோன்று தமிழகத்திலும் போதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி, பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எந்த வித தடையுமின்றி மருத்துவம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.�,