தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், அப்படி எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளது மாநில சமூகநலத் துறை.
தமிழகம் முழுவதும் உள்ள 43,205 சத்துணவு மையங்கள் மூலமாக, சுமார் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் சுமார் 2,000 கோடி ரூபாயைச் செலவு செய்து வருகிறது தமிழக அரசு. ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் மதிய உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் அமைப்பாளர், உதவியாளர் என இரண்டு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தனியாகவும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை தனியாகவும் 2 சத்துணவு மையங்கள் செயல்படும் நிலைமை பல பள்ளிகளில் உள்ளது.
25க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 8,000 என்றும், சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் உள்ள இந்த மையங்களை மூடும் நடவடிக்கைகளை டிசம்பர் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென்றும் தமிழக சமூகநலத் துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மலைப்பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அருகேயுள்ள சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்ட உணவு, மூடப்படும் மையங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டது. இதன் மூலமாக 24,000க்கும் அதிகமான பணியிடங்கள் குறைக்கப்படும் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 25 மாணவர்களுக்கும் குறைவான சத்துணவு மையங்களை மூடும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளது சமூகநலத் துறை. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தனித்தனியாகச் செயல்பட்டுவந்த சத்துணவு மையங்கள் இனி ஒரே மையமாக இயங்கச் செய்ய அறிவுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள சத்துணவுப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்குத் தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சமூக நலத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மையங்களில் பணியிலுள்ள ஊழியர்களைக் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது சமூகநலத் துறை.�,