சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்க இருந்த சசிகலா, கடைசி நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் சிறை சென்றார். இரு வருடங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் தனது கணவர் நடராசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்திலும், அவர் மறைவின்போதும் பரோலில் வெளிவந்தார். இரண்டு வருடங்கள் தண்டனை அனுபவித்துள்ளதால், வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்த காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் அண்மைக் காலமாக உலா வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், சசிகலா விடுதலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சசிகலாவை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. அவரை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. இதுகுறித்த வழக்கை தொடுத்து அவரை சிறைக்கு அனுப்பியது திமுகதான். பெண் என்னும் அடிப்படையில் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் நாங்கள் சந்தோஷப்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரச்சினைக்குரியவர்களாக இருப்பதால் அந்தக் கூட்டணியே ஒரு பிரச்சினைக் கூட்டணிதான் என்றும், ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக அமைக்கப்பட்டது அதிமுக-பாஜக கூட்டணி என்றும் தெரிவித்தார். மேலும் கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில், சிறையிலிருந்து விடுதலையாவது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.�,