‘கொலை மிரட்டலுக்குப் பயப்படவில்லை’ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று (பிப்ரவரி 24) கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி நாளிதழ் சார்பாகக் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகவே, தமிழகம் முழுவதும் பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் அவருக்கெதிராகப் போராட்டம் நடத்தினர். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். அறிவித்தபடியே கடந்த மாதம் ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஜீயர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டார். பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து பக்தர்களிடம் கேட்டு முடிவுசெய்வதாகக் கூறிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கடந்த 8ஆம் தேதி மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆண்டாள் கூறும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மறுநாளே மீண்டும் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இனி உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்குத் திருச்சி ராஜேந்திரன், அம்பேத்கர் தலித் கூட்டமைப்பு என்ற முகவரியிலிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதுபற்றி காவல் நிலையத்தில் ஜீயர் சார்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 24) செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், “இந்த மாதத்தில் தொடர்ந்து மிரட்டல் கடிதம் வந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் கொலை மிரட்டலுக்குப் பயப்படவில்லை. ஏனென்றால், நாங்கள் வணங்கும் ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆச்சாரியாரின் அருள் இருப்பதால் எங்களுக்குப் பயமில்லை. அதே போல், இந்த விஷயத்தை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.�,