எங்கே எமது ஆறுகள்..? – நரேஷ்
ஆறுகள் வெறும் வாழ்வாதாரங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை அடையாளங்களாகவும், நம்பிக்கையின் நினைவுகளாகவும், சாமானிய மக்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கின்றன. இதை ஆறுகளை ஒட்டி வாழும் எளிய மனிதர்களுடனான உரையாடலில் உணரமுடிந்தது.
“இந்த படித்துறையைப் பாருங்களேன்… இங்கிருந்துதான் அந்த ஆத்துக்குள்ள குதிப்போம். இந்தா இடப்பக்கம் இருக்கே, இங்கே குழந்தைங்க நீச்சல் கத்துக்கறதுக்குன்னு ஒரு சின்ன தொட்டி மாதிரி கட்டி வெச்சிருப்பாங்க. அங்குட்டு கொஞ்ச தூரத்துல ஆடு மாடுகளுக்குன்னு ஒரு தொட்டி இருக்கும். இந்தா இப்போ மண்ணு மூடி மேடா இருக்கே. அந்த எடந்தான் ஆறு வறண்டாலும், அதுல நிக்கிற தண்ணி மூணு மாசத்துக்கு ஆடு மாடுகளுக்குத் தண்ணி கொடுக்கும்” என்று ஒரு குழந்தையாகவே மாறிச் சுற்றிக்காட்டினார் உள்ளூர்வாசி மைதீன்.
இந்த உரையாடல் அம்மனிதர்கள் ஆறுகளின் மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பிற்கான சான்று. ஆனால், நவீனம் வளம் என்றால் பொருளாதாரம் என்ற எண்ணத்தை விதைத்தது. இன்று அந்தப் பொருளாதாரமும் அழிந்துவருகிறது. காரணம் – சிற்றாறின் சீர்கெட்ட நிலை.
சிற்றாறின் சிறப்புகளையும், தற்போதைய நிலைகளையும் விவரித்தார் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வேலுமயில். “திருநெல்வேலிக்குப் பாசனமளிக்கும் ஆறுகளில் மிக முக்கியமான ஆறு சிற்றாறு. குற்றாலத்தில் தொடங்கி இந்த மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான மானூர் வரை செல்கிறது. கிட்டத்தட்ட 80 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட வழித்தடத்துடன் செல்லும் இடமெல்லாம் செழிக்கச் செய்த வளமான ஆறு அது. இந்த வழித்தடம் மூலமாக 9,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தொடங்குற இடமான குற்றாலத்துலேயே சீர்கேடு ஆரம்பிச்சிடுது.”
**மனிதக் கொண்டாட்டத்தின் கழிவு – ஆறுகளின் இறப்பு**
“நாம குற்றாலத்துக்கு வந்து கூத்தடிச்சு கொண்டாடி பக்கத்துல தனியார் விடுதிகளிலும், ஹோட்டல்களிலும் தங்குறோம்; சாப்பிடுறோம். அதோட கழிவுகள் நேரடியா சிற்றாற்றுலதான் கலந்துவிடப்படுது. இது ஏதோ மறைமுகமா நடக்கும் குற்றம் அல்ல. இப்போ நீங்க போனாக்கூட அந்த கன்றாவிய வெளிப்படையா பாக்கலாம்” என்றவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.
*தனியார் செய்யுற இந்த தப்பையெல்லாம் அரசாங்கம் கண்டுக்கறதில்லையா?*
“நீங்க வேற… நகராட்சி நடத்துற கட்டணக் கழிப்பிடத்தோட மனிதக் கழிவுகள்தான் மிகப்பெரிய அளவுல ஆற்றை அழிக்குது. அவங்ககிட்ட பலநூறு முறை முறையிட்டும் எந்த பிரயோஜனமும் இல்லே. அரசாங்கமே தப்பு செய்யும்போது தனியாரை மட்டும் தட்டிக்கேட்டு என்ன பிரயோஜனம்?”
*அரசாங்கம் என்னதான் செய்யணும்?*
“ஏங்க… ஒரு செப்டிக் டேங்க் அமைச்சு, கழிவுநீர் லாரிகள் மூலமா அதை முறையா அப்புறப்படுத்தலாம். இது ரொம்ப சாதாரண விஷயமுங்க… இதுல அரசாங்கத்தோட அலட்சியம்தான், மத்தவங்களுக்கும் சாதகமா போயிடுது.”
*இதுவரைக்கும் ஏதாவது குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்பட்டிருக்கா?*
“ஒரே ஒரு செயல்கூட இல்லீங்க. இந்த மெத்தனத்தைப் பயன்படுத்தி இந்த ஆற்றோட வழித்தடத்துல பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. அவ்வளவு பெருசா ஓடிட்டு இருந்த ஆற்றோட பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு தோட்டங்களாகவும் கட்டடங்களாகவும் மாற்றப்பட்டதால, சிற்றாறே சின்ன ஓடையாத்தாங்க காட்சியளிக்குது..”
*இதனால என்ன பிரச்சினைகள் நடந்திருக்கு..?*
“இந்த ஆற்றோட கிளை நதிகள், கால்வாய்கள்னு எல்லாமே அடைபட்டிருக்கு. இந்த ஆற்றின் போக்கை நம்பியிருந்த பல்வேறு குளம் குட்டைகள் இன்னிக்கு வறண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுது. நீர் இல்லாம விவசாயமும் செய்ய முடியல. அதனால விவசாய நிலங்களும் ரியல் எஸ்டேட் ஆகிடுச்சு.
இதை நாம ஆற்றோட அழிவுன்னு மட்டும் பாக்குறோம். அதுக்கு பின்னாடி நடக்கிற தொடர்ச்சியான அழிவுகள் பத்தி நாம சிந்திக்கிறதில்லை. உண்மையில அவைதான் மிக முக்கியமாகக் கவனப்படுத்த வேண்டியவை.”
*இவற்றை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?*
“ஒரு விவசாய நிலம், ரியல் எஸ்டேட் மனைகளுக்காகப் பண்படுத்தப்பட்டுட்டா, அதைத் திரும்ப விளைய வெக்கிறது சாத்தியமில்லாத விஷயம். மனுஷன் தொடர்ந்து நடந்தாலே அங்கே புல்லுகூட முளைக்காது. அப்படியிருக்க, இதுபோன்ற நிலங்களை மீட்டெடுக்குறது சாத்தியமான வேலையா எனக்கு தோணலை. காலம் கடந்து ஆற்றை மீட்டெடுத்துட்டோம்னு வெச்சுக்கங்க, அப்போ நிலம் இல்லாம என்ன பண்ணுவீங்க..? விவசாயத்தைப் பாதுகாக்குறதுனா ஆறுகளையும் நீர்நிலைகளை பாதுகாக்குறதுதானே? இந்த அடிப்படையைக்கூட புரிஞ்சுக்காம விவசாயம் பத்தி பக்கம் பக்கமா பேசியும் எழுதியும் என்ன பிரயோஜனம்?”
மேலும் அவர் தனது கால்களைக் காட்டினார். இந்த ஆற்றின் நீரை விவசாய நிலங்களில் நிறுத்தினால், அதற்குள் இறங்கும்போதெல்லாம் அரிப்பெடுக்கிறது என்றார். அவ்வளவு கழிவுகளும் ரசாயனங்களும் அந்த ஆற்றில் கலந்துவிடப்படுகின்றன. அவைதான் அம்மக்களின் உணவைத் தயாரிக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன?
கலந்துவிட்ட கழிவுகள் கணக்கு பார்த்து வந்து கவள உணவை நிறைக்கிறது. கண்டுகொள்ளப்படாத அழிவின் சீற்றம் அதுதான்!
[எங்கே எமது ஆறுகள்..?](https://minnambalam.com/k/2019/03/10/8)�,”