ராஜஸ்தானில் பசு கடத்தினார் என்ற பெயரில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட ரக்பர் கான் வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசின் முதன்மைச் செயலரை நேற்று (ஆகஸ்ட்-20) உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
கடந்த ஜீலை17ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம், கும்பல் படுகொலைகளைக் கும்பல் பைத்தியக்காரத்தனம் என்று கூறிக் கடும் கண்டனம் செய்து நாடாளுமன்றத்தில் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் கண்டித்த சில நாட்களுக்குள்ளேயே ராஜஸ்தானில் ரக்பர் கான் என்பவர் தனது இரு பசுக்களைக் கொண்டுவரும்போது பசுக் காவலர்கள் என்ற பெயரில் செயல்படும் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆல்வர் மாவட்டத்தில் ராம்கர் என்ற பகுதியில் நடந்த இந்த படுகொலைக்கு பின்னர் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையானது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது. விசாரணையின் போது இக்கொலை வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது என்றும் இந்த விவகாரத்தில் அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜ் அரசின் நிலை என்ன என்பதையும் ராஜஸ்தான் அரசின் முதன்மைச் செயலர் தெளிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கும்பல் கொலைகள் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என ராஜஸ்தான் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் இவ்வாறான உத்தரவைப் பிறப்பித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையானது வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.�,