குழந்தைகளுக்காக உருவாகும் புதிய அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றில் மூன்று இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் இணைந்துள்ளார்.
தமிழில் குழந்தைகள் நடிக்கும் படங்கள் உருவாகும் அளவுக்குக் குழந்தைகளுக்கான படங்கள் வெளிவருவதில்லை. குழந்தைகளின் மன உலகை விவரிக்கும் வகையில் புலிகளை மையமாக வைத்து அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார். இவர் காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
புலிகளை மையமாக வைத்து சமூக கருத்துகளையும் வலியுறுத்தும்விதமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இசையமைப்பாளர்கள் விவேக், மெர்வினோடு அனிருத்தும் இணைந்து இசையமைக்கிறார். சென்னை, கேரளாவின் வனப்பகுதி மற்றும் வடஇந்தியாவில் சில இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. விரைவில் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.�,