mகள்ளக்குறிச்சி: மகனா, மச்சானா? கள நிலவரம்

Published On:

| By Balaji

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மச்சான் சுதீஷும் மோதுகிறார்கள்.

மகனும் மச்சானும் நேருக்கு நேர் மோதும் கள்ளக்குறிச்சி களம் எப்படி இருக்கிறது?

ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதே கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி. இது விழுப்புரம், புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, சேலம் என மூன்று மாவட்டங்களில் பரவியிருக்கிறது.

**சமுதாய பலம்**

ஆறு சட்டமன்றத் தொகுதியில் கள்ளக்குறிச்சி, கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு (பழங்குடியினர்) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தனித் தொகுதிகள். ஏற்காடு தொகுதியில் மலைவாழ் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆத்தூர், கெங்கவள்ளி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் கொங்கு வேளாளர் கவுண்டர், வன்னியர், தலித் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் வன்னியர், தலித், சமுதாயத்தினர் இருந்தாலும் உடையார், முதலியார், செட்டியார், தெலுங்கு நாயக்கர், கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இந்த சமுதாய பலத்தை வைத்தே வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார வியூகங்களையும், ஆதரவு திரட்டும் படலங்களையும் நிகழ்த்தி வருகிறார்கள்.

**இறங்கிவரும் பொன்முடி**

திமுக கூட்டணியில் ஐஜேகே கட்சி சேர்ந்ததே கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியே முடிவாகியிருந்த நிலையில் பொன்முடி தன் மகன் கௌதம சிகாமணிக்கு இந்தத் தொகுதியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று தலைமையிடம் போராடி வாங்கிவிட்டார்.

மார்ச் 26ஆம் தேதி, தொகுதியின் ஈசானி மூலையான மணலூர்பேட்டையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய கௌதம சிகாமணி, இரண்டாவதுகட்ட பிரச்சாரத்துக்கும் தயாராகிவிட்டார். ஏற்கனவே பொன்முடி ஒன்றியச் செயலாளர்களைக் கூட்டிக்கொண்டு ஒவ்வொரு கிளைச் செயலாளராகச் சந்தித்து வருகிறார். அவர்களிடம், ‘நான் கறார் பேர்வழிதான். கோபக்காரன்தான். ஆனா, ஊருக்கும் உங்களுக்கும் நன்மை செய்யறதுக்குதான் இப்ப என் மகன் போட்டி போடுறாரு. நீங்க கடுமையாக உழைச்சு வெற்றிபெற வைக்கணும். உங்க குடும்பத்துக்கும் ஊருக்கும் தொகுதி மக்களுக்கும் நிச்சயம் நல்லது செய்வோம்” என்று இறங்கிவந்து பேசிவருகிறார். வேட்பாளர் கௌதம் சிகாமணியின் நண்பர்கள், உறவினர்கள் ஊர் ஊராக திண்ணை பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிமுக நேரடியாகப் போட்டியிடாததால் தேமுதிகவுக்கு முழுமையாக உழைக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இதை அறிந்து சேலம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் உதயசூரியனுக்கு அதிகமான வாக்குகள் பெற்று தருவதாக சூளுரை எடுத்துள்ளாராம் வீரபாண்டி ராஜா. 2014 எம்.பி தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட மணிமாறன் மவுன்ட் பார்க் ஸ்கூல் வைத்துள்ளார். அவர் போட்டியிட்டபோது தங்கள் பள்ளி மாணவர்களிடம், ‘ பெற்றோர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னாராம். ஆனால், கடந்தவாரம் ஸ்கூல் பிராயர் நேரத்தில் மாணவ மாணவிகளிடம், ‘ உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி நல்லவர்களுக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறாராம். இந்தத் தகவல் பொன்முடி கவனத்துக்குச் சென்றதும் அப்செட்டாகியுள்ளதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

**அதிமுக – பாமக சோர்வு!**

தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டத்திலும் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் தந்தை பொன்முடி சொந்த கட்சியினரை நம்ப மாட்டார், எதிர்க்கட்சியை நம்பிதான் இருக்கிறார், நீங்கள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு விலை போய்விடாதீர்கள் என்று திரும்ப திரும்ப பேசும்போது சுதீஷ் முகம் வாடியதாகச் சொல்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள். தேமுதிக வேட்பாளர் சுதீஷ் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் நெருங்கி இறங்கிவந்து பேசவில்லை என்ற வருத்தம் அனைவரிடமும் உள்ளது. அதேபோல் முதல்கட்ட செலவுகளைச் செய்வதற்கு பணத்தை எடுக்க யோசிக்கிறார். அதிமுக பிரமுகர்கள் பூத் செலவுக்குப் பணம் கேட்டால் உங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மந்திரி பார்த்துக்குவாங்க என்று சொன்னார்கள். அவர்களிடம் போய் கேளுங்கள் என்ற சம்பவம் அதிமுகவினரிடையே சோர்வினை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபக்கம் என்றால் அதிமுகவினர் ஒத்துழைக்கும் அளவுக்கு பாமகவினர் ஒத்துழைக்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள் என்ற அதிருப்தியை அன்புமணியிடம் ஷேர் செய்துள்ளார் சுதீஷ் என்கிறார்கள்.

தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டாமல் ஏதோ ஓர் அதிருப்தியில் சேலம் மார்க்கமாக ஒதுங்குகிறார் சுதீஷ். வெளியூர்களில் இருந்துவரும் தேமுதிக நிர்வாகிகள் மட்டும் பலர் வசதிக்கு ஏற்ப இரண்டு நாட்கள், ஐந்து நாட்கள் தங்கி ஊர் ஊராக முரசு சின்னத்துக்கு வாக்குகளைக் கேட்டுப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து கொண்டு புறப்பட்டுவிடுகிறார்கள்.

அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் சார்பாக பரிசுப்பெட்டி சின்னத்தோடு பிரச்சார வாகனங்கள் மட்டுமே தொகுதி முழுவதும் வலம் வருகிறது. கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரப்படி முதல்கட்டப் பணிகளில் திமுகவே முன்னே சென்றுகொண்டிருக்கிறது.

**- எம்.பி. காசி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share