mகல்லூரிகளில் தொடரும் பாலியல் தொல்லைகள்!

Published On:

| By Balaji

திருவண்ணாமலை அருகே அரசு வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரியில், விடுதியில் தங்கி பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் இரவு நேரங்களில் விடுதிக்குச் சென்று அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைத் தாங்க முடியாத மாணவி இதுபற்றி பெண் காப்பாளர்கள் 2 பேரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் உதவி பேராசிரியர் சொல்படி கேட்டால் பெரிய ஆளாகி விடலாம் என்று கூறியதுடன் உதவி பேராசியருக்காக மாணவியிடம் தொல்லை கொடுத்து வந்தனர்.

**கல்லூரி முதல்வரிடம் புகார்**

இதனால், பொறுமையிழந்த மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை தனது சொந்த ஊரான வாழவச்சனூர் விரைந்து வந்து கிராம மக்களிடம் மகளின் நிலைகுறித்து தெரிவித்தார். மாணவிக்கு ஆதரவாகத் திரண்ட கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கல்லூரி முன்பு முற்றுகையிட்டு, கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டி.எஸ்.பி. பழனி, ஆய்வாளர் பாண்டி மற்றும் காவல்துறையினர் வேளாண் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

**ரெக்கார்டிங் ஆதாரம்**

உதவிப் பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் தன்னிடம் செல்போனில் பேசிய பேச்சுக்களை கல்லூரி மாணவி பதிவு செய்துள்ளார். அதைத் தனது தந்தை மூலம் கல்லூரி முதல்வரிடம் ஆதாரமாக வழங்கியுள்ளார். அதில் உதவி பேராசிரியர்கள் மாணவியிடம் எனது ஆசைக்கு இணங்கினால் அதிக மதிப்பெண்கள் பெற உதவுகிறேன் என்று கூறியுள்ளார். விடுதி பெண் காப்பாளர்கள் 2 பேரும் மாணவியிடம் உதவி பேராசிரியரின் ஆசையைப் பூர்த்தி செய்து விடு. உனக்கு அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன் பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியில் நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு 2ஆம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று புனிதா மற்றும் மைதிலி ஆகிய இரு உதவிப் பேராசிரியர்களும் மாணவிக்கு வலை வீசியுள்ளனர்.

**விசாரணை**

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் தலைமறைவாகி விட்டார். பெண் காப்பாளர்களிடம் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், எங்களிடம் புகார் வரவில்லை. கல்லூரியில் விசாரணை முடிந்து கல்லூரி சார்பிலோ, மாணவி சார்பிலோ புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனைத்தொடர்ந்து இன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கல்லூரி முதல்வரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார்.

**நீதிமன்றத்தில் வாக்குமூலம்**

இதுதொடர்பாக மாணவி இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் பாலியல் புகார் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

**நீதிபதியின் பேட்டி**

அதனைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எத்தனை நிர்மலா தேவி இருக்கிறார்கள் என்பது தெரியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள். இந்த குரு மாணவிகளிடம் நடந்து கொண்ட செயல் வேதனை அளிக்கிறது. மாணவியின் குற்றச்சாட்டுகள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் வேறு கல்லூரிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரியிலும், குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். பேராசிரியைகளே கல்லூரி மாணவியை தவறாக வழிநடத்த முயன்றது வேதனையளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share