விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பாததால் வேளாண் துறையின் செயல்படா சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதால் விவசாயிகள் பயிர் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவிட்டனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயக் கடன்களின் கீழ் செயல்படா சொத்துகளின் மதிப்பு ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில வங்கித் துறை அதிகாரிகள் குழுவின் அறிக்கை நவம்பர் 14ஆம் தேதியன்று வெளியாகியது. இந்த அறிக்கையில், ’சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுவதால் பஞ்சாப் மாநில விவசாயிகள் பெற்ற பயிர் கடனைச் செலுத்தாமல் நிறுத்திவிட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளிடம் சிறு, குறு விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. வாங்கிய பயிர் கடனைச் செலுத்துவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுவதாகவும், அதன் விளைவாக வேளாண் துறையில் செயல்படா சொத்துகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் வங்கித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மாநில வங்கித் துறை அதிகாரிகள் குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, வேளாண் துறையில் செயல்படா சொத்துகளின் மதிப்பு கடந்த ஆண்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் ரூ.633 கோடியாக இருந்ததாகவும், நடப்பு ஆண்டின் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ.8,952 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.�,