mகச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படுமா?
கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாகவே கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய சர்வதேசக் காரணிகள் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றால் இந்தியாவின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இக்காரணிகள் நரேந்திர மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி மும்பையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று விவாதித்துள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் சுத்திகரிப்புத் துறை அதிகாரிகள் இருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் செப்டம்பர் 23ஆம் தேதி தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரையில், பேரல் ஒன்றுக்கு 80 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா நாள் ஒன்றுக்கு 44 லட்சம் பேரல்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,