நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 15 சதவிகிதம் குறையும் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
’எக்ஸ்பெரிஸ் ஐ.டி.’ என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்தியாவின் 560 முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச மந்தநிலை காரணமாகவும், தானியங்கிமயம் அதிகரித்து வருவதாலும், பணியில் போதிய திறமையின்மை காரணத்தாலும் இத்துறையில் வேலைவாய்ப்பு சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களில் சுமார் 58 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு பணிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வில் 34 சதவிகித நிறுவனங்கள் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவுகளில் மட்டும் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், ஐ.டி. நிறுவனங்களில் வேலைக்குச் சேர்க்கப்படுபவர்களில் 24 சதவிகிதத்தினர் தென்னிந்திய ஐ.டி. நிறுவனங்களிலும், 16 சதவிகிதத்தினர் வட இந்திய ஐ.டி. நிறுவனங்களிலும் மற்றும் 2 சதவிகிதத்தினர் மேற்கு இந்திய ஐ.டி. நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களில், 53 சதவிகித நிறுவனங்கள் 3 முதல் 8 வருட அனுபவம் கொண்ட நபர்களை பணியில் சேர்க்கவிருப்பதாகவும், 19 சதவிகித நிறுவனங்கள் அனுபவமற்ற அல்லது மூன்று வருடங்கள் வரை அனுபவமுள்ள நபர்களை பணியில் சேர்ப்பதாகவும், 2 சதவிகித நிறுவனங்கள் மூத்த தகவல் தொழில்நுட்பவியலாளர்களை பணியில் சேர்க்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.�,