சேலத்தில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 15 ஊராட்சிகளில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 18 ஊராட்சிகள் வழியாக எட்டு வழிச்சாலை அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினமான கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் பாரப்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த கிராம மக்கள், அதிகாரிகளைச் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி ஜெயந்தி தினமான இன்று, தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாவாரி கிராம சபைக் கூட்டம் உட்பட 15 இடங்களில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியபோது அதிகாரிகள் ஏற்க மறுத்திருந்தனர். ஆனால், இன்று இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.�,