மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் தவறான பிரச்சாரத்தால், நீட் உள்ளிட்ட திட்டங்களை நாங்கள் கொண்டுவந்ததுபோல் மக்கள் மனதில் பதிவாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வென்றுள்ளன. அதிமுக தேனியில் மட்டும் வென்றுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 24) சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ”ஆர்.கே.நகரை வளைத்ததுபோலத் தமிழகம் முழுவதும் வளைத்துவிடுவோம் என்று கூறி, கிட்டதட்ட பல்லாயிரம் கோடி செலவு செய்து தினகரன் தோல்வி அடைந்துள்ளார். வாக்காளர்களும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபராகத்தான் தினகரனின் நிலை உள்ளது. மீத்தேன், நியூட்ரினோ, நீட், ஜிஎஸ்டிக்கு எல்லாம் வித்திட்டது திமுகதான். ஆனால் அவர்களின் தவறான பிரச்சாரத்தின் மூலம், இந்தத் திட்டங்களை நாங்கள் கொண்டுவந்தது போல மக்களிடையே எடுபட்டுவிட்டது” என்றார்.
”திமுகவுக்கு தமிழக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வது வாடிக்கையாகிவிட்டது. எனவே மக்களவைக்குச் சென்றும் சட்டையை கிழித்துகொண்டு வெளியில் வராமல் இருந்தால் நல்லது” என்று மறைமுகமாகச் சாடினார். முதல்வர், துணை முதல்வர் உட்பட அதிமுகவினர் சொன்னது திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்பதுதான். அந்த வகையில் இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். அறுதிப் பெரும்பான்மையோடு நாங்கள் 2021 வரை ஆட்சியை நடத்துவோம். அதன் பிறகும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவு குறித்துப் பேசிய அவர், இது தற்காலிக வெற்றி என்று கூறினார்.
ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ”எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அனுமானத்துக்குப் பதில் சொல்ல முடியாது” என்றார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”