mஇன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி

Published On:

| By Balaji

வன்னியிலிருந்து கண்ணீர் செய்திகள்

**டி.எஸ்.எஸ்.மணி**

ஈழ விடுதலைப் போர், தனக்குள் முப்பதாண்டுகள் அறவழி பாதையையும், முப்பது ஆண்டுகள் ஆயுதப் பாதையையும் உள்ளடக்கி இன்று அரசியல் உரிமை அறவழி தடத்தில் தத்தி தத்தி நடைபோடுகிறது. மே 18 மறக்கமுடியாத, ரத்த சாட்சிகளாக நம் கண் முன் நிற்கிறது. ஆயுதங்களை மவுனிக்கிறோம்” என்று போராளி இயக்கம் அறிவித்த பின்னாலும், இன அழிப்புப் போருக்காக தயாரிக்கப்பட்ட “கோரமுகங்களின்” தாக்குதல்கள், தமிழினத்தை எழ விடாமல் “காவல் நிலையத்தில்” விசாரணைக் கைதியைத் தண்ணீர் ஊற்றி அடித்துக் கொண்டே இருப்பது போல ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. உள்ளூர் சக்திகள் மட்டுமல்ல உலக சக்திகளும் இணைந்தே நடத்திய அந்தக் கோர தாண்டவத்தில் கொல்லப்பட்ட உயிர்கள் ஆண்கள் ,பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கில் வன்னி பகுதியை “நினைவுகளில் நனைத்த வண்ணமே” உள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த “படுகொலைகள்” ஐ.நா மனித உரிமை கழகம் வரை சென்றும் கூட இன்னமும், “நியாயம்” வழங்கப்படவில்லை. அதேசமயம் தீவு நாட்டின் பேரினவாத சக்திகள், “புதிய புதிய வடிவங்களில்” அடக்குமுறையை தொடரத்தான் செய்கின்றன. மனித உரிமைகள் இன்னமும் வடக்கிலும், கிழக்கிலும் கேள்விக்குறியுடனே நிற்கிறது. தாங்கள் சிங்கள ராணுவத்தின் கைகளில் இருக்க தங்கள் விதவை சகோதரிகளுக்கு எந்த வழியும் கிடைக்காத நிலையில் வேலைகளுக்கும், உணவுக்கும் இன்னமும் உத்திரவாதம் இல்லாமல் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தவிப்பதைக் காண முடிகிறது.

போருக்குப் பின்னுள்ள “மயான அமைதி” காலத்தில் வீட்டிற்குள் பெண் குழந்தைகள் தங்கள் தாயிடம்,” அம்மா நாம் கிளிநொச்சியில் செய்வதை போல மெழுகுவர்த்தி வைப்போமா?” என வினவுவதும், தங்கள் தந்தை, சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு “நினைவாக” ஏதாவது செய்யத் துடிப்பதும் “கதவுகளை, ஜன்னல்களை, சாவித் துவாரத்தை எல்லாம் மூடிக் கொண்டு மெழுகு வர்த்தி ஏத்துங்கள்” என்று தாயார்கள் அறிவுரை கூறுவதும் நினைவில் ஊஞ்சலாடுகிறது. அந்த நிலையே நான்கு ஐந்து ஆண்டுகள் நீடித்ததே?

குறைந்த பட்சம், போரில் உயிர்நீத்தாருக்கு அஞ்சலி செலுத்தவும் நினைவேந்தல்களை நிகழ்த்தவும் போர் முடிந்த நான்கு ஆண்டுகளுக்கு எப்படி தடுக்கப்பட்டார்களோ, அதே சூழல் மீண்டும் அரங்கேறி வருகிறது. ஆட்சி மாற்றம் மேற்குலகின் நிர்பந்தத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே “அதிபர் தேர்தல்” மூலம் கிடைத்த, “மூச்சுவிடும் சுதந்திரத்தை” தமிழ்மக்கள் சுவாசித்து வந்தார்கள்.

2015 ல் “நாடாளுமன்ற தேர்தல்” நடப்பதற்கு முன்னால் “மனித உரிமை அமைப்பின்” மூலம் “கிளிநொச்சி கனகபுரம் மைதானத்தில்” வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றிலிருந்து, கூட்டப்பட்ட 3000 இளைஞர்களை, ” தெரிவுகள் எம்மிலிருந்து” என்ற தலைப்பில் நேரில் சந்தித்தேன்.தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் நேரில் கண்டபோது நான் பூரித்துப் போனேன். எந்த நேரத்தில் ராணுவம் உள்ளே நுழையுமோ என்ற அச்சம் கவ்விக் கொண்டது. நல்வாய்ப்பாக, “ஐ.நா.வின் ஹபிடட் அலுவலகம்” எதிரே கண்காணித்துக் கொண்டே இருந்த நிலையில் இளைஞர்கள் கூட்டத்தைக் கலைக்க அரசு முயலவில்லை. அதுவே முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு “அரசியல் விழிப்புணர்வுடனான அணிதிரட்டல்” என எனக்குப் பட்டது.

இடைக்காலத்தில்,”நல்லாட்சி அரசு” வந்த பிறகு தமிழ் மக்கள் குறைந்தபட்சம் கிளிநொச்சியில் மே மாதங்களில் மீண்டும் ” ராணுவத்தால் இடிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைகளை” கட்டி எழுப்பியதைக் காண முடிந்தது. ஆனால், மீண்டும் இப்போது ஈஸ்டர் நாளன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் “பயங்கரவாதிகள் தாக்குதல்கள்” தொடுத்ததைப் பயன்படுத்தி கடுமையான நெருக்கடியை,”யாழ்ப்பாணம், வன்னி” “பகுதிகளில் அரச படையினர் அரங்கேற்றி வருகின்றனர். ஒவ்வொரு சிறிய அசைவிற்கும்,”காவல்துறையின் அனுமதியை” கேட்க வேண்டும் என்கின்றனர். அத்தகைய நெருக்கடியிலும், “சமூக சிற்பிகள்” என்ற மனித உரிமை அமைப்பு பீதியுற்றிருக்கும் தமிழ் மக்களின்,”ஆன்மீக நம்பிக்கைகளின்” வெளிப்பாடுகள் மூலம் அவர்களுக்கு “சுதந்திரமாக நினைவேந்தல்களை” நடத்த ஒழுங்கு செய்கின்றனர். வன்னி பகுதியில் இருக்கும் “சமூக சிற்பிகள்” அமைப்பினர் தங்கள் “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” முயற்சிகளை இங்கே விவரிக்கின்றனர் .

“யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்துகொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தமிழர் வாழ்வியலில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலையினை உண்டாக்கியிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் காவல்துறையின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை. மீண்டும் பாமர மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் எமது ‘சமூக சிற்பிகள்’ நிறுவனமானது மக்களுடன் பயணிப்பதற்கான சிறு முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்தவகையில் எமது நிறுவனத்தின் முதலாவது நிகழ்வாக, 13.05.2019 அன்று, சிலாவத்தை தீர்த்தக்கரையில் தண்ணீர்ப் பந்தல் ஒன்றை அமைத்து காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து வரும் அடியவர்களுக்கு மோர் உட்பட்ட நீராகாரத்தினை வழங்கும் செயற்பாடு வெகுசிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அன்றைய ‘தீர்த்தம்’ எடுக்கும் நிகழ்வு முடிந்ததன் பின்னர் எமது நிறுவன ஊழியர்களால் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி யுத்த காலத்திலே இறந்த அத்தனை ஆத்மாக்களுக்காக மிக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

மிக நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தினதும் காவல் துறையினதும் பிரசன்னத்தின் மத்தியில் ஒரு நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எமது ‘சமூக சிற்பிகள்’ நிறுவனம் கடமையாற்றியிருக்கிறது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர வைகாசிப் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக சிலாவத்தைக் கடலில் தீர்த்தம் எடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கும். இந்த ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில்தான் சர்வதேசத்தின் ஆசியுடன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் அரங்கேற்றப்பட்டுப் பல்லாயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. வரலாற்றுக் காலந்தொட்டு ஈழத்தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த இவ்வாலயம் ஈழத்தமிழினம் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரவலத்திலும் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும்.

அதன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனிலுள்ள ஆலயமொன்றில் இறந்த ஆத்மாக்களின் ஆத்மசாந்திக்காக அன்னதான நிகழ்வினை 15.05.2019 அன்று ஒழுங்கு செய்திருந்தோம். எமது நிதிப் பங்களிப்புடன் கிராம மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுடன் நாமும் சேர்ந்து சமைத்து, ஆத்மசாந்திப் பூஜையுடன் நிகழ்வினை ஆரம்பித்தோம். சிறுவர் சிறுமியர் தேவாரம் பாடி சிட்டிகளில் தீபமேற்றி, மக்களின் பூரண ஒத்துழைப்புடனும் அவர்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடனும் மிகச் சிறப்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் 16.05.2019 அன்று கிளிநொச்சி மலையாளபுரத்திலும், 17.05.2019 அன்று கிளிநொச்சி ஊற்றுப்புலத்திலும் ஆலய வழிபாடுகளுடன் அன்னதான நிகழ்வுகளை நடத்தினோம்.

இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஒருவித உத்வேகத்தையும் தங்களாலும் இதேபோல் செய்ய முடியுமென்ற தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சம் கொள்ளும் நிலைதான் காணப்படுகின்றது. அதுவும் போர் இடம்பெற்ற கிராமங்களில் மக்களை பயப்பீதியில் உறைந்திருக்கின்றனர். அந்த மக்களுக்குப் போர்க்காலத்தில் இடம்பெற்ற அவலங்களையும், உறவுகள் இழப்பை நினைவு கூர்வதிலும் தயக்கங்களும் பயமும் இருப்பதை அவதானித்தோம். இந்த உறைநிலையை அப்படியே விடாது மக்கள் மனங்களைக் கட்டுடைத்துவிட வேண்டிய சந்தரப்பங்களை ஏற்படுத்த எமது நிறுவனம் முயற்சித்தது. அதன் முதற்தொடக்கமாகவே மக்கள் அச்சமின்றியும், அச்சம் போக்கவும் சரணடையும் ஆலயங்களை நோக்கி கிராம மக்களை அணிதிரளச் செய்தோம். சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் ஒன்றுகூடவும் நினைவுகளைப் பகிர்ந்து அஞ்சலி செய்யவும் மக்கள் ஆலயத்துக்கு வருகை தந்தனர். ஆலய வெளியில் சுதந்திரமாக அஞ்சலித்துப்போயினர். அத்துடன் ஒருவேளை உணவை பொதுவிடத்தில் பகிர்ந்து ஒற்றுமையையும், உறவையும் புதுப்பித்துச் சென்றனர்.

உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் மே மாத நினைவாஞ்சலிகளை வீர வணக்கங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், “வன்னி” பகுதியில் நடத்துவது மட்டும்தானே நமது இதயத்தை தொடுகின்றது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share