mஇந்தியாவைச் சூழும் ஜப்பான் நிறுவனங்கள்!

Published On:

| By Balaji

இந்தியாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்கும் அம்சங்கள் எளிதாக்கப்பட்டு வருவதால், இந்தியாவை நாடும் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நிய முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருவதாலும் இந்தியாவில் அதிக முதலீட்டைக் கொட்டித் தங்களது தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் விரிவுபடுத்தி வருகின்றன. குறிப்பாக, ஜப்பானிய நிறுவனங்களின் படையெடுப்பு இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டின் அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக இந்தியாவுக்கான ஜப்பானியத் தூதர் கெஞ்சி ஹிரமாட்சு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவைத் தொடர்பு கொண்ட ஹிரமாட்சு, “இந்தியாவில் எங்களது வருடாந்திர தொழில் மேம்பாட்டு ஆய்வை முடித்துள்ளோம். அதன்படி, மொத்தம் 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இருந்த எண்ணிக்கையை விட இது 5 சதவிகிதம் (72 நிறுவனங்கள்) அதிகமாகும். இந்தியாவின் உலோகம் மற்றும் சேவைகள் துறையில் ஜப்பானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழில் புரிந்துவருகின்றன. எனவே, வரிகள், மூலதனக் கட்டுப்பாடுகள், உள்கட்டுமானம் உள்ளிட்ட பிரிவுகளில் எங்களது நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தியா தீர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தங்களது நிறுவனங்களின் எண்ணிக்கையையும், முதலீடுகளின் அளவையும் இரட்டிப்பாக ஜப்பான் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக ஹிரமாட்சு கூறினார். 2000ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் 2018ஆம் ஆண்டின் ஜூன் வரையில் ஜப்பானிலிருந்து 28.16 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.�,