வனமெல்லாம் செண்பகப்பூ 6 – ஆத்மார்த்தி
சங்கர் கணேஷ் என்றால் என்னவெல்லாம் நினைவுக்கு வரும்..? மெல்லிசை மன்னர்களிடம் உதவியாளர்களாகப் பணிபுரிந்து தொழில் பழகிய இரட்டை இசை அமைப்பாளர்கள். தன் சகா மரணமடைந்த பிறகு இன்றளவும் அவரைத் தன் பெயரோடும் உயிரோடும் சுமந்துகொண்டிருக்கும் இன்னொருவர். யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வீட்டு வாசலில் வந்து சேர்ந்து வெடித்துச் சிதறிய பார்சல் வெடிகுண்டு அவர் உயிரைக் குடித்தது. ஒரு இசைக்கலைஞன் மீது யாரால் இப்படி வன்மத்தை உமிழ முடியும்?
நாற்பது ஆண்டுக் காலம் இசைக்கடலின் அத்தனை சுழல்களிலும் தாக்குப் பிடித்த இரட்டையர்கள் என்பது என்ன லேசாய்க் கடந்து போய்விடக்கூடிய விஷயமா..? அதுவும் கே.வி.மகாதேவன் எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற ஜாம்பவான்கள் காலத்திலிருந்து இளையராஜாவின் முதல் இருபது ஆண்டுகள் வரைக்குமான காலகட்டம். எண்ணற்ற படங்கள், எண்ணிலடங்காப் பாடல்கள். இந்திய, சர்வதேசப் பாடல்கள் பலவற்றின் உந்துதல் கொண்டு பல பாடல்களை உருவாக்கினார்கள் என்றபோதும் சங்கர் கணேஷின் முத்திரைப் பாடல்கள் எனப் பல நூறு பாடல்கள் உண்டு. மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாத மென் சோகம் ஒன்றை அதன் இயலாமையோடு அழகுற இசைப்படுத்தி மென் மெலடிப் பாடலாக்குவது இந்த இரட்டை இசையமைப்பாளர்களுக்கு அநாயாசம்.
பாடலுக்கான லட்சணங்களைப் பொதுவாக மீறிப் புத்தாக்கம் செய்ய விழைவது திரை இசையைப் பொறுத்தவரை வெகு இயல்பாக நடந்தேறும் விஷயம் போலத் தோன்றினாலும் புதுமை என்பது வேறு; மாற்றம் என்பது நிஜமாகவே வேறான ஒன்றுதான். திரைப்படங்களுக்கான இசை என்பது எப்போதுமே காலகட்டத்தின் முன் தேவைக்கான பூர்த்தி செய்தலை முன்வைத்தபடி நகரத்தக்கது. அங்கே நிர்பந்தங்களின் நான்கு மால்களுக்கு வெளியே இருந்துகொண்டு பற்பல புத்தாக்கங்களை, பரீட்சார்த்தங்களை எளிதில் செய்துவிட முடியாது. இயக்குநர், நடிகர் அல்லது இசை அமைப்பாளர் என்று ஒரு நபர் உச்சம் பெறுகையில் இப்படியாக எந்தப் பொதுமையின் கூடைகளுக்கு உட்படும் வளர்ப்புப் பறவை போலிருப்பதிலிருந்து வெளியேறும் திரைப்பாடலானது வன வனாந்திரங்களைத் தாண்டி அநாயாசம் காட்டும் காட்டுப் பறவையாகவே தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியது. அப்படியான மாற்றத்தின் பாடல்கள் அந்தப் படம் என்பதைத் தாண்டி அது வெளியாகிற காலகட்டத்தின் திரை இசை நகர்தல் தடத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை பெற்றுவிடுவதும் உண்டு.
பட்டிக்காட்டு ராஜா படத்தின் ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’ எனும் பாடல் இரட்டையர்கள் இசையில் எனக்குப் பெருவிருப்பப் பாடலாகும். அதற்கடுத்தாற்போல் ‘அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே’ என்று தொடங்கக் கூடிய டார்லிங் டார்லிங் டார்லிங் படப்பாடல். அதன் தொடக்கச் சரளி ஒரு உற்சாகச் சுனையென்றே பெருகுவது. இன்றளவும் அதன் புதுமை குன்றிவிடவில்லை. நல்மணி மாலையாய்த் தனிக்கும் அப்பாடல். ‘உன்னை அழைத்தது கண்’ எனும் தாய்வீடு படப்பாடல் சங்கர் கணேஷின் அற்புதங்களில் அடுத்தது. இதயத் தாமரை படத்தில் ‘யாரோடு யாரென்ற கேள்வி’ எனும் பாடலும் ‘ஒரு காதல் தேவதை’ பாடலும் அட்டகாசங்கள். ‘பால் நிலவு காய்ந்ததே’, ‘யாரோ அழைக்கிறார்கள்’, ‘வானம் அருகில் ஒரு வானம்’ ஆகிய பாடல்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை.
இந்த அத்தியாயத்தில் வனமெல்லாம் மலரும் செண்பகப்பூ எதுவென்றால் 1971 ஆமாண்டு வெளியான தெய்வம் பேசுமா எனும் படத்திற்காக சங்கர் கணேஷ் உருவாக்கிய இந்தப் பாடல்தான். ஆரம்ப கால எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மென் குரலில் இந்தப் பாடலின் அளவுக்கு குழைதலும் ஜாலமும் கொண்ட இன்னொன்றைச் சுட்டுவது கடினமானதே.
ஒரு பாடலின் இலக்கணம் அல்லது லட்சணம் என்று பின்பற்றி வந்த இயங்குமுறை எதுவென்றால் தொகையறாவில் ஆரம்பிக்கும் அல்லது தொடக்க இசைக்குப் பின்னால் பல்லவியாய்த் தொடங்கும். பிறகு இடையிசை, அதன்பின் முதல் சரணம், இடையிசைக்குப் பிறகு இரண்டாம் சரணம், அதன் பின் பாடலின் நிறைதல். அந்தக் காலத்தில் மூன்றாம் பிளவாக மூன்று சரணங்களைக் கொண்டு பகுக்கப்பட்ட பாடல்களும் நிறையவே இருந்தன. இங்கே இந்தப் பாடலின் சுவை இப்பாடலின் உட்கட்டுமானத்தை இரட்டையர்கள் உருவாக்கித் தந்த விதம்தான். வழமையிலிருந்து வெகுவாய் விலகித் தனித்தது இந்தப் பாடல். அனுபல்லவி ஒன்றைப் பல்லவியாக்கினாற்போல் இதன் முதல் பல்லவி ஒலிக்கும். சரணங்கள் இரண்டுமே பல்லவிக்குச் சமமான இணை பல்லவிகளாகவே பெருக்கெடுக்கும். நின்றொலிக்கும் சுழல் இசையும் அதனூடாகப் பாடிய பாலு, ஜானகி இருவரின் ஜாலப் பகிர்வுகளும் குழைதல்களும் வேறெப்போதும் அனுபவித்திராத பேரின்பமாகவே [இப்பாடலை](https://www.youtube.com/watch?v=-ve7aq3bJC0) நம் முன் நிறுத்தும்.
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
இந்தப் பல்லவி முடிகையில் பாலுவின் குரலைக் கவனித்தால் வீணையின் கிடாரின் வயலினின் அதே கம்பியினூடான இழைதலைத் தன் குரலில் கொணர்வதைப் பார்க்கலாம்.
நிலவென மேலாடை காற்றோடு ஆட உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட
இந்த வரியை முதல் முறையும் இரண்டாம் முறையும் பாடுவதை என்னவென்பது..?
நிலவென மேலாடை காற்றோடு ஆட உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட
பழகிய கையோடு கையொன்று கூட தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சைத் தேட
காலை வரும் வரையில் நாடகமோ காதலனின் மடியில் ஆடிடவோ
முழுவதுமாக ஒன்றோடொன்று இணைந்தியைந்து நகர்ந்து கடல்வரை பயணிக்கும் உபநதிகளைப் போலவே ஜானகியின் குரலுக்குத் துணையாக அடக்கி வாசித்திருப்பார் பாலு. சற்றே வழக்கத்தைவிட மென்மைக்குப் புறத்தே பலமான ஒலிக்கோர்வையில் ஜானகியின் குரல் ஆதிக்கம் செலுத்தும்.
ஒன்றே ஒன்று
கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும் கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தைக் கூறும்
கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும் கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தைக் கூறும்
அமுதோடு தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும் அளவோடு தந்தாலும் என் ஆசை மீறும்
ஆடிவரும் இரவில் பொன் உலகம் நாயகனின் உறவில் என் உலகம்
ஒன்றே ஒன்று
இந்தப் பாடலிலிருந்து வெளியேறுவது மிகக் கடினம். எத்தனை தாமதமாக இதனை முதல் முறை கேட்டாலும் சரி. பாலு பிடிக்கும், ஜானகி பிடிக்கும், இசை பிடிக்கும், பாடல் பிடிக்கும் என்று எதன் நிமித்தம் இப்பாடலினுள் நுழைந்தாலும் சரி; திரும்புவதற்கான வழிகளைத் தான் மட்டும் அறியும் புதிர்வனச் செண்பகப்பூ இந்தப் பாடல்.
வாழ்க இசை!
[பாடலுக்கு மொழி இருக்கிறதா..?](https://minnambalam.com/k/2019/06/07/25)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
�,”