ஒரு கப் காபி! – ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள்
– மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த எந்த வகையாக இருந்தாலும், கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களைப் பிரிக்கின்றன.
– அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும் அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்திருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் வெறுப்பு, யுத்தம், பகைமை போன்றவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
– உண்மையை அடைவதற்குப் பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ, எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது.
– பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால், தீர்வு அதிலிருந்தே கிடைத்துவிடும். ஏனென்றால் பிரச்சினையும் தீர்வும் வெவ்வேறு அல்ல.
– அறிவு என்பது இரண்டு இருள்களுக்கிடையே பாயும் ஒளிக்கீற்று. ஆனால், அறிவானது அந்த இருளுக்கு மேலேயோ, அந்த இருளைக் கடந்தோ போக இயலாது. அறிவு நிபுணத்துவத்திற்கு அத்தியாவசியமானது – எஞ்சினுக்குக் கரியைப் போல. ஆனால், அது அறிவுக்கெட்டாத நிலையை (unknown) எட்டித் தொட இயலாது. அறிவுக்கெட்டாத நிலையை, அறிவென்னும் வலை வீசிப் பிடிக்க இயலாது. அறிவுக்கெட்டாத நிலை உண்டாக, அறிவு புறந்தள்ளி வைக்கப்பட வேண்டும். ஆனால், அறிவை அப்படிப் புறந்தள்ளி வைப்பது எவ்வளவு கடினமானது!
– நாம் இறந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணம் இறந்த காலத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகிறது. இறந்த காலம், அறிந்த நிலை (known) ஆகும். இறந்த காலத்தின் பிரதிபலிப்பு, எப்போதும் நிகழ்காலத்தை – அறிவுக்கெட்டாத நிலையை – முழுமையாக மறைத்துக்கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்பது, இறந்த காலமானது தன்னை நிச்சயமற்ற நிகழ்காலத்தின் வழியே உந்திச் செல்வது ஆகும். இந்தப் பிளவு, இந்த இடைவெளி – தொடர்ச்சியாக இல்லாமல், விட்டு விட்டு எரிகிற, அறிவு என்கிற விளக்கினால் நிறைக்கப்பட்டு, நிகழ்காலத்தின் வெறுமை மூடப்படுகிறது. ஆனால், அந்த வெறுமையே வாழ்வின் அதிசயத்தைத் தாங்கி நிற்கிறது.�,