அ. குமரேசன்
இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலும், இந்திய மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் என்பதும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பது வியப்புக்குரியது அல்ல; பெருமைக்குரியது. பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் என்பதாலும், அனைத்து நாடுகளுடனும் அரசியல், வணிகம், பண்பாடு ஆகிய தளங்களில் உறவு கொண்டிருப்பதாலும், இது உலகளாவிய கவனத்தைப் பெறுகிறது – அதில் வியப்பில்லை. சுதந்திர இந்தியாவின் தேர்தல் நடைமுறை தொடங்கப்பட்டு முதல் தேர்தல் நடத்தப்பட்ட நாளிலிருந்தே இது பாலினப் பாகுபாடோ, பணக்காரர் – ஏழை மாறுபாடோ, சாதி – மத – இன வேறுபாடோ இல்லாமல், வாக்களிக்கும் வயதை அடைந்த இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமமாகப் பங்கேற்கிற ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திவிட்டது. ஆகவே இது பெருமைக்குரியது.
முழுமையான ஜனநாயகமா என்றாலும், இது முழுமையான ஜனநாயகம்தானா என்னும் கேள்வியும் எழுகிறது. ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டால், அடுத்த தேர்தல் வரையில் பிரதிநிதிகளைத் தட்டிக்கேட்க முடிவதில்லைதான். தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முறையாக நிறைவேற்றாதபோது பதவியைப் பறித்துத் திரும்ப அழைக்கிற அதிகாரமில்லைதான்.
100 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் 25 பேர் வாக்களிப்பதில்லை, மீதியுள்ள 75 பேர் வாக்களிக்கிறார்கள், அதில் வெறும் 27 பேரின் வாக்குகளை ஒரே திரட்சியாகப் பெறுகிறவர், 26 வாக்குகளைப் பெறுகிறவர் உள்ளிட்ட 48 பேரின் வாக்குகளைப் பெறுகிறவர்களைப் பின்னுக்குத் தள்ள முடிகிறது, வாக்குச் சாவடிக்கே வராத அந்த 25 பேருக்கும் சேர்த்து இவர்தான் பிரதிநிதியாகிறார் என்ற நிலைமை இருப்பது உண்மைதான். தற்போதைய ஒற்றைப் பெரும்பான்மை ஏற்பாட்டில் உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாக இல்லாமலே, அந்த 27 வாக்குகளைப் பெற்றவர், மீதியுள்ள 73 பேர் உள்ளிட்ட 100 பேரையும் ஆள முடிகிறதே – இது முழுமையான ஜனநாயகமாகுமா என்ற கேள்வியின் நியாயத்தை மறுக்க முடியாதுதான். தேர்தல் சீர்திருத்தத்துக்கான தேவை இருக்கத்தான் செய்கிறது.
சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை இங்கேயும் கொண்டுவருதல், இரண்டு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தி, பதிவாகும் வாக்குகளில் பின்தங்குகிறவர்களைக் கழித்து, இறுதிப் போட்டியில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுகிறவரைப் பிரதிநிதியாக அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் செயல்பாடு அல்லது செயலின்மை அடிப்படையில் அவரைத் திரும்பப் பெறுவதற்கான தேர்தலை நடத்துதல் ஆகிய சீர்திருத்தங்களை, ஜனநாயகத்தில் அக்கறை உள்ள சில கட்சிகளும் அரசியல் கருத்தாளர்களும் முன்வைக்கிறார்கள். இவை இந்தியச் சூழலுக்கு ஏற்ப மேலும் செழுமைப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு முழுமையான ஜனநாயகத் தேர்தல் அமைப்பு இங்கே நடைமுறைக்கு வந்தாக வேண்டும்.
இதுவெல்லாம் சாத்தியமாகிற வரையில், தற்போதைய தேர்தல் முறையிலிருந்து விலகியிருக்கலாமா? கூடாது. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் அந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள். ஆனால், தேர்தல் ஒரு திருவிழாவோ, கொண்டாட்டமோ விழா அல்ல, விருப்பமிருந்தால் மட்டும் பங்கேற்பதற்கு. இது ஓர் அரசியல் கடமை, சமூகப் பொறுப்பு.
**விமர்சனங்களோடு தயாராகுதல்**
மக்களவைத் தேர்தலோடு, தமிழகத்தில் இடைத் தேர்தல் நடந்தாக வேண்டிய 21 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளைத் தவிர்த்துவிட்டு 18 இடங்களுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி தனது அதிவேக உள்நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு, அந்தக் கூட்டங்களில் புதிய திட்டங்களை அறிவித்த பிறகு, தேர்தல் தேதிகளை ஆணையம் அறிவித்தது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் போட்டியிடுகிற வாரணாசி தொகுதிக்குக் கடைசிக் கட்டத் தேதியில் வாக்குப் பதிவு நடைபெறுவது போல “அமைந்துவிட்டது” தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா?
முன்பு ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வேறு வேறு தேதிகளில் நிறைய இடைவெளிவிட்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மாநில ஆளுங்கட்சிக்குத் தற்போதுள்ள சட்டமன்றப் பெரும்பான்மைக்கு உடனடிப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற துணைக்கேள்வியும் இதில் தொற்றிக்கொள்கிறது. அந்த மூன்று தொகுதிகள் தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பாகவும் குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, அதற்கு முந்தைய வழக்குகளின் தீர்ப்புகள் வந்ததுண்டு. வழக்குகளை விலக்கிக்கொள்ளட்டும், தேர்தலை அறிவிக்கிறோம் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுகிறபோது, ஆளும்கட்சிக் கூட்டணியினர் இதே விளக்கத்துக்குள்தானே பதுங்குகிறார்கள் என்று அரசியல் கருத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
**தொடக் கூடாத அந்த பட்டன்**
இப்படியான கேள்விகளுக்கு ஆணையம் பதில் சொல்லுமா? தெரியாது. அவர்கள் அடுத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். இறங்கியாக வேண்டும். ஆனால், ஆணையச் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதும், அதன் மீதான நம்பிக்கை பாதுகாக்கப்படுவதும் ஜனநாயகக் கட்டமைப்பில் மிகவும் முக்கியமானது.
தேர்தலில் பங்கேற்பது என்ற பெயரில், வாக்குப் பதிவு எந்திரத்தின் கடைசி பட்டனில் விரல் வைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அந்த ‘நோட்டா’ பட்டனில் விரலை அழுத்துவதில்லை என்று முடிவெடுக்கிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள். வேட்பாளர்கள் யாரும் சரியில்லை, ஆகவே யாருக்கும் என் வாக்கு இல்லை என்று பதிவு செய்கிற ஏற்பாடாக, அது ஓர் ஆரோக்கியமான வழியாக, வேட்பாளர்களையும் கட்சிகளையும் சிந்திக்க வைக்கிற அணுகுமுறையாகத் தோன்றுகிறது. ஆனால், யார் ஆண்டால் எனக்கென்ன, நாடு என்னவானால் எனக்கென்ன என்ற பொறுப்புத் துறப்பு மனநிலைக்கான பட்டன்தான் அது.
களத்தில் நிற்பவர்களையும் அவர்களது அரசியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, இருப்பதற்குள் மாற்று சக்தி எதுவென முடிவு செய்து அவர்களுக்குத் துணையாக நிற்கும் வகையில் பட்டனை அழுத்துவதே முறை. அப்படி யாரோடும் நிற்காமல் ஒதுங்குவது, அநீதிகள் தொடர அனுமதிக்கிற அலட்சியம்தான். ஏதேனும் ஓர் அணிக்கோ, கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவளிக்காமல் ‘நோட்டா’ பண்ணிவிட்டு, ஆட்சிக்கு வருகிறவர்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் பலன்களை மட்டும் அனுபவிக்கத் தயாராக இருப்பதில் கூச்சமில்லையா? தேர்தலுக்குப் பிறகு மோசமான ஆட்சி நடக்கிறதென்றால், அதற்குக் காரணமானவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமே அல்ல, நோட்டா பட்டனை அழுத்தியவர்களும்தான்.
**மாற்று சக்தி உருவெடுக்கும் வரையில்**
அனைத்துத் தரப்பு வாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, கடந்த ஐந்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில், இன்றைய சூழலில் யாருக்கு ஆதரவளித்தால் நல்லது என்று முடிவு செய்வது வாக்காளர்களின் உரிமை. தேர்தல் போட்டியில் ஈடுபடாதவர்களுக்குமேகூட, வாக்காளர்களிடையே ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவும் ஆலோசனையாகக் கூறவுமான உரிமை இருக்கிறது.
இப்படிப்பட்ட கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுவது ஒருபுறமிருக்க, தேர்தலுக்கே எதிரான கருத்துகளும் பரப்பப்படுகின்றன. இத்தனை தேர்தல்களைப் பார்த்துவிட்டோம், இதுவரை 16 மக்களவைகளைப் பார்த்துவிட்டோம், மாறி மாறி வந்த ஆட்சியாளர்களைப் பார்த்துவிட்டோம் – மக்கள் வாழ்க்கையில் மாற்றம் எதையாவது பார்த்தோமா என்று கேட்கப்படுகிறது. ஆட்சியாளர்களும் கட்சிகளும் வாக்களித்தபடி சமத்துவ சமுதாயம் உருவானதைப் பார்த்தோமா, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் நின்றுபோனதைப் பார்த்தோமா, இயற்கைச் செல்வங்கள் முதல் உழைப்பின் பலன்களை வரையில் கொள்ளைபோவது தடுக்கப்பட்டதைப் பார்த்தோமா, மக்கள் வஞ்சிக்கப்படுவது முடிவுக்கு வந்ததைப் பார்த்தோமா என்றெல்லாம் எழுகிற கேள்விகளின் நியாய ஆவேசத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
இந்தியாவின் தற்போதைய தேர்தல் முறையில் ஜனநாயகம் இருக்கிறதென்றாலும் அடிப்படையில் இது முதலாளித்துவம் சார்ந்த நாடாளுமன்றத் தேர்தல் முறைதான். இது முழுமையானது, முற்றிலும் நம்பகமானது என்று நம்பினால் அதுவொரு மாயைதான். சிற்சில குறைபாடுகளை நீக்கிச் சரி செய்துவிட்டால்போதும், ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிற உண்மையான மக்களாட்சி நிலைபெற்றுவிடும் என்று நினைத்தால் அதுவொரு மயக்கம்தான்.
மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிற, அனைவரையும் சமமாக நேசிக்கிற, பாகுபாடுகளை வெறுக்கிற, மனித உரிமைகளை மதிக்கிற, மிகமிகக் குறுகிய மக்கள்தொகை உள்ள சமூகங்களின் குரல்களையும் கேட்கிற, நம்பகமான, வலுவான, அர்ப்பணிப்பு மிக்கதொரு மாற்று இயக்கம் பெரியதொரு சக்தியாக எழுந்தால்தான் மேற்படி மாயைகளும் மயக்கங்களும் தேவையற்ற ஆரோக்கியமான ஜனநாயகம் வேரூன்றும். அதுவரையில், நாட்டை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று தற்போதைய தேர்தல் முறையிலிருந்து விலகி நிற்கலாமா?
இத்தகைய மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளைக் காத்துக்கொள்வதற்காகவேகூட, கருத்துரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வருகிறவர்களோடு நிற்கத்தான் வேண்டும். மாற்று என்பதை அந்தரத்திலிருந்து வரவழைத்துவிட முடியாது. அந்தரத்திலிருந்து பொருள்களை வரவழைக்கிற மேஜிக் கலைஞர்கள்கூட, மறைத்து வைத்திருக்கிற பொருள்களை ஆதாரமாகக் கொண்டுதான் அவற்றை வரவழைக்கிறார்கள். தற்போதைய அரசியல் அணிகளுக்குள் இருக்கிற நேர்மையான மக்கள் சக்திகளிலிருந்துதான் மாற்று இயக்கத்தையே கட்ட முடியும். முதலாளித்துவ நாடாளுமன்றத்தைத் தள்ளுபடி செய்கிற அவசரத்தில், அப்படிப்பட்ட நேர்மையான சக்திகளையும் சேர்த்துக் கொச்சைப்படுத்துவது, மாற்று முயற்சிகளை அந்தரத்தில் தள்ளிவிடும்.
மாற்று இயக்கம் தலைதூக்குகிற வரையில் தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்று முடிவு செய்வதும், அநீதிகள் தொடர்வதை அனுமதிக்கிற நோட்டா மனநிலைக்கு மாறுபட்டதில்லை. சுட்டிக்காட்டுகிற, தட்டிக்கேட்கிற உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், முழுமையான சமத்துவ ஜனநாயகத்தை நிலைநாட்டுகிற இடத்துக்குச் செல்வதற்குத் தற்போதைய தேர்தல் வாகனத்திலும் பயணிப்போம்.�,”