பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தப் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கவிஞர் தாமரை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வை ரத்து செய்து கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இன்று தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கவிஞர் தாமரை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் இன்று (மே 18) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சமமற்ற நிலை நிலவுகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு அவசியமானதுதான், ரத்து செய்யத் தேவையில்லை. ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான ஒன்றை இவ்வளவு மனநெருக்கடி, சமூக நெருக்கடிக்கிடையில் நடத்துவது, என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ அதற்கு எதிரான விளைவையே கொடுக்கும்.
கொரோனா பாதித்த குழந்தைகள், கொரோனா பாதித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகள், கொரோனாவால் வறுமைக்குள்ளான குழந்தைகள் இருக்கிறார்கள். அதெல்லாம் இல்லாமல் நன்றாக உள்ள குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சமமாகக் கருதிப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாது.
நிலைமையின் தீவிரம் கருதி, தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஜூலை 15-30 வரையிலான காலகட்டத்தில் வேண்டுமானால் தேர்வை நடத்த யோசனை செய்யலாம். ஜூலை 1-15 வகுப்புகள் நடத்தி, மன இறுக்கத்தைத் தளர்த்தி, பிறகு அடுத்த 15 நாட்கள் நடத்தலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 3 நாட்கள் இடைவெளி கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இதுகூட, ஜூலையில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று கணக்கெடுத்த பிறகுதான்!. ஓரிரு மாதங்கள் தேர்வு தள்ளிப் போனாலும், குழந்தைகளின் உடல்,மனநலம் முக்கியம். எதிர்காலம் என்பது இவற்றோடு தொடர்புடையது அல்லவா ?. எனவே தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனைக் கேட்டுக்கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,