ரபிஹா: குடியரசுத் தலைவருக்கு தமிழக எம்.பி கடிதம்!

Published On:

| By Balaji

பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி ரபிஹாவுக்கு குடியரசுத் தலைவர் கையால் பட்டம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நேற்று 27ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறி விழா அரங்கிலிருந்து மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்டார். குடியரசுத் தலைவர் பல்கலையிலிருந்து புறப்பட்ட பின்னர் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி தனக்கு வழங்க வந்த தங்கப்பதக்கத்தை நிராகரித்தார் மாணவி. மாணவியின் செயலுக்குப் பல தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வரும் அதே வேளையில் அவர் வெளியேற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”விழாவில் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தனது தோற்றமே காரணம் என்று ரபிஹாவே நம்புகிறார். ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு இந்தியப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. வன்முறையில் ஈடுபடுபவர்களை அவர்களது உடையை வைத்தே அடையாளம் காண முடியும் என்று பிரதமர் சொன்னதன் நேரடி விளைவாகவே இதனைப் பார்க்கமுடிகிறது. மாணவிக்கு ஏற்பட்ட இந்த இழிவைத் துடைக்க முன்வர வேண்டும். ரபிஹாவுக்கு வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான செய்தியை நீங்கள் கொடுப்பீர்கள் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே மாணவி மறுத்த தங்கப்பதக்கத்தை வழங்க நீங்கள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவி வெளியேற்றப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், மாணவி வெளியேற்றப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. இது புதுவை மாநிலத்துக்கு அவமதிப்பாகும். இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கமும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். குடியரசுத் தலைவா் சென்ற பின்னர் விழா அரங்கு செல்ல அனுமதிக்கப்பட்ட அம்மாணவி பல்கலைக்கழக கலாச்சார இயக்குநர் ராஜிவ் ஜெயினிடம் இருந்து தங்கப்பதக்கத்தைப் பெறாமல் எதிர்ப்பை பதிவு செய்ததையும், குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலினும் மாணவிக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் சாசனத்திலிருந்து ‘மதச்சார்பின்மை’யை வெளியேற்ற வேண்டும் என நினைப்பவர்களே பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து ரபிஹாவை வெளியேற்றியுள்ளனர். இதற்கு, தன் கல்வியால் பெற்ற தங்கப் பதக்கத்தைப் பெறமறுத்து தன் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் ரபிஹா” என்று பதிவிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share