தமிழ்நாடு டிஜிபிக்கு போக்குவரத்துத் துறை கடிதம்!

Published On:

| By Balaji

�காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு தமிழ்நாடு காவல் துறை டிஜிபிக்கு போக்குவரத்துத் துறை கடிதம் எழுதியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், காவலர்களுக்குப் பல்வேறு சலுகைகளை முதல்வர் அறிவித்தார். அதில், இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம். அதற்கு காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் உதயபாஸ்கர், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அதில் முதல்வர் அறிவிப்பின்படி, காவலர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்கு, பேருந்தில் பயணம் செய்யும் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இலவச பஸ் பாஸ் மூலம் சென்னையில் குளிர்சாதன பேருந்தை தவிர மற்ற பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில், விலையில்லா பயணச்சீட்டு மூலம் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காவலர்கள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் காவலர்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான கட்டண செலவைக் கணக்கிடுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் துறையினரின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share