தாமதமாகும் திருமழிசை மார்க்கெட்: அதிகரிக்கும் காய்கறிகளின் விலை!

public

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு, தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கு மாறாக திருமழிசை பகுதியில் சந்தை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மார்க்கெட் அமைப்பதற்காக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் 100 கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த பகுதியில் காவல் துறையினரின் கண்காணிப்பு கோபுரங்கள், மூன்று சோதனைச் சாவடிகள் மற்றும் ஒவ்வொரு கடைக்கும் 10 அடி இடைவெளியில் 100 கடைகள், தொழிலாளர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகியவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் திருமழிசையில் காய்கறி சந்தை திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் சரிவர முடியாததால் மார்க்கெட்டில் விற்பனை தொடங்குவது தள்ளிப்போகும் என தெரிகிறது.

இதற்கிடையே திருமழிசை மார்க்கெட்டில் வசதிகள் போதாது, எனவே திருமழிசை மார்க்கெட்டுக்கு செல்லமாட்டோம் என்று வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் கூறும்போது, ”மொத்த வியாபார மார்க்கெட்டை இரண்டு நாட்களில் உடனே மாற்றிவிட முடியாது. அடிப்படை வசதிகள் இருந்தால்தான் வியாபாரிகள் வருவார்கள். மார்க்கெட்டுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வரும். லாரி டிரைவர்கள் தங்கி ஓய்வெடுக்க பாதுகாப்பான இடம், கழிவறை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருந்தால்தான் அங்கு வியாபாரம் செய்ய முடியும் இதற்கு எல்லா வியாபாரிகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

லாரிகளில் காய்கறிகள் வந்தாலும் அதை வாங்கிச் செல்வதற்கு சில்லரை வியாபாரிகள் வரவேண்டும். சென்னையிலிருந்து திருமழிசை 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஒரு வியாபாரி வந்து செல்லவேண்டும் என்றால் கூட 80 கிலோமீட்டருக்கான பெட்ரோல் செலவாகும். இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் தான் நாங்கள் காய்கறி லாரிகளை வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம். இதனால் ஐந்து நாட்களுக்கு காய்கறி லாரிகள் வராது. மேலும் வசதிகள் செய்து தரவில்லை என்றால் கடை திறப்பது மேலும் தள்ளிப்போகலாம். எங்களுக்கும் கொரோனா உயிர் பயம் உள்ளது.

செய்து தரப்படும் வசதிகளை நேரில் பார்வையிட்டதற்கு பிறகு வியாபாரிகளிடம் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை அறிவிப்போம். பத்தாம் தேதி வரை மொத்த வியாபாரிகள் திருமழிசை செல்ல வாய்ப்பு இல்லை” என்று அவர் கூறி உள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் இயங்காததாலும், திருமழிசை மார்க்கெட் இன்னும் திறக்கப்படாததாலும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது

நேற்றைய சரக்கில் மீதமிருந்த காய்கறிகளை இன்று விற்பனை செய்ததாகவும் நாளை விற்பதற்கு கைவசம் காய்கறிகள் இல்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் காய்கறிகள் கடுமையான விலை உயர்வும், தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

*-பவித்ரா குமரேசன்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *