தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 75.28 கோடி ரூபாயில் ஆக்சிஜன் குழாய் அமைக்க முதல்வர் ஆணை வெளியிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது. ஒரிரு நாட்களில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடக்கும் நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு, ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் 13,900 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்படுவதாக பொது பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைப்பதற்காக 75.28 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் உயர்தர ஊசி, மருந்துகளையும் தருவித்து, மாவட்ட அளவில் இருப்பில் வைத்து கொரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருகிறது. இதன் ஓர் அங்கமாக ஆக்சிஜன் செல்லும் குழாய்களை பொதுப்பணித் துறையின் மூலம் அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைப்பதற்கும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,”