இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய இரயில் வலையமைப்பில் ஒன்றாகும். அதுபோன்று அதிகமான ஊழியர்களை கொண்டிருக்கும் உலகின் பெரிய துறைகளில் இந்திய ரயில்வே ஒன்பதாவது இடத்தில் உள்ளது.13,169 பயணிகள் ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயங்குகின்றன. தோராயமாக ஒருநாளைக்கு 23 மில்லியன் பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணம் மற்றும் வசதி ஆகியவற்றின் காரணமாக பேருந்து பயணத்தை விட ரயிலை தேர்வு செய்வார்கள். நீண்ட தூர ரயில் மற்றும் மின்சார ரயில் எதுவாக இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
ரயில்களில் முதியவர்கள், நோய் பாதிப்புள்ளவர்கள், கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள், வேலை மற்றும் இண்டர்வியூக்காக செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பயணிக்கின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் ரயில்களில் அதிகளவு பயணம் செய்வார்கள். ஒரு குழுவாக பயணம் செய்யும் இளைஞர்கள் என்ஜாய்மெண்ட் என்ற பெயரில் இவர்கள் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவாக உள்ளது. மற்றவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்று நினைக்காமல் செல்போனில் சத்தமாக பாட்டை போட்டு ஆடுவது, தாளம்போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். ஒருசிலருக்கு ஹெட்செட் போட்டு பாட்டு கேட்பது கடினமாக இருப்பதால், பாட்டை சத்தமாக வைத்து கேட்பார்கள். அதுபோன்று செல்போனில் பேசும்போதும், சத்தமாக பேசினால்தான் மற்ற பக்கத்தில் இருப்பவருக்கு கேட்கும் என்று கத்திபேசுவார்கள். ரயிலில் சிக்னல் கிடைக்காது என்று தெரிந்தும் சிலர் போன் செய்து கத்தி பேசுவார்கள். இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். முதியவர்கள் மற்றும் குழந்தையை வைத்திருப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும். பயணம் செய்யும் அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுபோல அனைவரும் சந்தோஷமான மனநிலையில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கூற முடியாது. சிலர் ஏதோ ஒரு பதட்டத்துனும், சிலர் தூக்கத்துடனும், கவலையுடனும் பயணம் செய்யும்போது இதுபோன்ற செயல்கள் கூடுதல் மன சுமையை கொடுக்கும்.
ஒட்டுமொத்தமாக இதுபோன்ற செயல்கள் ரயிலில் பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிரமமாக இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ரயில் பயணம் இனிமை என்றாலும், அதிலும் சில இன்னல்கள் இருக்கதான் செய்கிறது.
இந்த நிலையில் ரயில் பயணத்தை மிகவும் வசதியாகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனிமேல் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கக் கூடாது, சத்தமாக பேசக் கூடாது. ஹெட்செட் இல்லாமல் இசையைக் கேட்பதையோ அல்லது சத்தமாக தொலைபேசியில் பேசுவதையோ பயணிகள் தவிர்க்க வேண்டும். குழுவாகப் பயணிக்கும் பயணிகள் வெகுநேரம் வரை பேசக் கூடாது . ரயிலில் இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும்.
பயணிகள் யாரேனும் அசௌகரியத்தை எதிர்கொண்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள். பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க, ஆர்.பி.எஃப், டிக்கெட் பரிசோதகர்கள், கோச் உதவியாளர்கள் மற்றும் கேட்டரிங் உள்ளிட்ட ரயில் ஊழியர்கள், பயணிகளின் ஒழுங்கையும் கண்ணியமான பொது நடத்தையையும் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று விதிமுறைகளை கடைபிடிக்காத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்த நிலையில், இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ரயிலில் அதிகமாக பயணம் மேற்கொள்ளும் மயில் என்பவர் கூறுகையில்,”ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கதக்கது. குறிப்பாக இரவு நேரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பயனளிக்கும். ஆனால் பகல் நேரங்களில் இந்த கட்டுப்பாட்டை கடைபிடிப்பது கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் பயணிகள் எப்படி பேசமால் பயணிக்க முடியும். முன்பு மாதிரி கிடையாது, இப்பெல்லாம் பிள்ளைகள் எல்லாம் காதுல ஹெட்செட் மாட்டிக்கிட்டு செல்போனை நொண்டிக் கொண்டு வருகிறார்கள்” என்று கூறினார்.
**-வினிதா**
�,