-நிலவளம் கு.கதிரவன்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கிருமியானது இன்று உலகத்தையே முடக்கிப்போட்டுள்ளது. இன்று வரை அதற்கான மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அதற்கான ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கொரோனாவின் அறிகுறிகளாக சளி, இருமல், தொண்டைப் பிரச்சினை என்பவை அரசு விளம்பரங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் டெல்லியில் அறிகுறிகளே இல்லாமல் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்தான் 2020 ஏப்ரல் 12-இல் இண்டர்நேஷனல் ஃபோரம் ஆப் அலர்ஜி மற்றும் ரினாலஜி (International Forum of Allergy & Rhinology)இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனாவுடன் தொடர்புடைய வாசனை மற்றும் சுவையிழப்பு பற்றிய விவரங்கள் உலகளவில் பதிவாகியிருந்தாலும், முறையான ஆய்வுகள் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களிடைய இத்தகைய அறிகுறி எந்தளவிற்கு பொதுவான நிலையில் உள்ளது என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க இயலவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று நோய்க்கு வாசனை மற்றும் சுவையிழப்பு ஆரம்ப அறிகுறிகள் என்று ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
வாசனை இழப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் உப்பின் சுவை அல்லது இனிப்பின் சுவைகளை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் சுவையின் குறிப்பிட்ட வகையை அடையாளம் கண்டறிய முடியாது என்றும், பொதுவாக வாசனை இழப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் சுவை உணர்வை இழப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின் ஆய்வின் அடிப்படையில் வாசனை மற்றும் சுவையிழப்பு ஏற்பட்டால், தொற்று நோய்க்கான பிற காரணங்களைவிட, கொரோனா தொற்றுக்கு 10 மடங்கு சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக கொரோனாவிற்கான அறிகுறி காய்ச்சல்தான் என்றாலும், அதற்கு முந்தைய நிலை அறிகுறிகளுக்கான ஆய்வு எங்களுக்கு தேவைப்பட்டது என்கிறார், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.கரோல்யான். டாக்டர் யான் குழுவினர், கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்த 1480 நோயாளிகளிடமிருந்து தரவுகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். கொரோனா தொற்று முடிவு தெரிந்த 102 நோயாளிகளில் 59 பேர் வாசனை மற்றும் சுவை இழப்பு ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வு மிக முக்கியமாக வாசனை மற்றும் சுவையிழப்பு அறிகுறி, கொரோனா பாதிப்பு உள்ளானோருக்கு மட்டுமே தனித்துவமானதா என்பதைக் கண்டறிவதாகவும் இருந்தது.
ஆய்வில் கொரோனா நேர்மறை (Positive) நோயாளிகளில், வாசனை இழப்பை அனுபவித்தவர்கள் சுமார் 68% பேர். சுவை இழப்பை சந்தித்தோர் 71% பேர் என தெரிய வந்தது. கொரோனா எதிர்மறை ( Negative ) நோயாளிகளில் வாசனை இழப்பு 16%, சுவையிழப்பு 17% பேர் இருந்தனர். இவர்களில் கொரோனா தொற்று உள்ளவர்களின் சுவையுணர்வானது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் தங்கள் வாசனை மற்றும் சுவையுணர்வு பாதிப்பிலிருந்து மீண்டனர் என்றும் டாக்டர் யான் தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வில் பங்கேற்றவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையிலோ, செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் நிலையிலோ, மற்றும் சுவாசப் பாதை அழற்சி நிலையிலோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இருந்தபோதிலும் அவர்கள் இருந்த பகுதிகள் சமூக விலகலை கடைபிடிக்கும் சூழ்நிலையில் இல்லை. எனவே எளிதாக சமுதாயத்துக்கு தொற்றை கடத்தும் காரணிகளாக இருந்தனர். காரணம் லேசான அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து கூட தொற்று எளிதாக பரவும். ஆகையால் வாசனை மற்றும் சுவையிழப்பு என்பது கொரோனாவிற்கான அழுத்தமான அறிகுறிகளாக குறிப்பிடப்பட வேண்டும்.
இந்த ஆய்வு முடிவுக்குப் பிறகு மற்ற பல நிறுவனங்களும் இதை பின்பற்றும் என தான் நம்புவதாகவும், வாசனை மற்றும் சுவையிழப்பு பாதிப்பானது கொரோனா தொற்றுக்கான எச்சரிக்கை என்பதோடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வைரசிற்கான ஒரு பாதுகாப்பு அளவீடாகவும், பரிசோதனை நடவடிக்கைக்காகவும் பயன்படுத்துவார்கள் என எண்ணுகிறேன் என்று டாக்டர் யான் தெரிவித்துள்ளார்.
�,”