�பெட்ரோல் டீசல் விலை உயர்வு: போராட்டத்தில் குதிக்கும் லாரி உரிமையாளர்கள்!

Published On:

| By Balaji

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிர்ணய படி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கடந்த 10 தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்ச் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியுள்ளார்.

தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சேலத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, 12 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் மத்திய அரசின் முடிவு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறுகையில், இந்தியாவில் 18 மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாரி உரிமையாளர்கள் வாழ்வா சாவா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் டீசல் விலை தினசரி உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது.

டீசல் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் தென்மாநிலங்களில் சுமார் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும்.

கால அவகாசம் முடிந்தும் பல சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்டேக் முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியாக பணம் செலுத்தும் வகையில் சுங்கச்சாவடிகளில் ஒரு வழியை கொடுக்க வேண்டும்.

லாரி உரிமையாளர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு, எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்ச் 15ஆம் தேதி முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு முன்பாக மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க வரும் 26ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

**- பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share