போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த ஓட்டுநர் கைது!

Published On:

| By Balaji

சென்னை போரூரில் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்துக் காவலரைக் கன்னத்தில் அறைந்த வடமாநில லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரூர் ஏரி அருகே உள்ள சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பகவதி பெருமாள், தலைமைக் காவலர்கள் சந்திரசேகர், இளங்கோ, லிங்கா, குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வழியாக வந்த வடமாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று சர்வீஸ் சாலையில் செல்ல முற்பட்டபோது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி மாற்று சாலையில் செல்லும்படி கூறினர்.

இதை ஏற்க மறுத்த லாரி ஓட்டுநர், வாகனத்தை மேலும் இயக்கியுள்ளார். இதனால் ஓட்டுநருக்கும், போக்குவரத்து காவலர் சந்திரசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவலரை இந்தியில் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் லாரி ஓட்டுனர் கத்தியை காட்டி மிரட்டியதும் இல்லாமல், எதிர்பாராத நேரத்தில் காவலரை கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, லாரி ஓட்டுநர் எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பை மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தாக் அகமது(54) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசாங்க ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

வடமாநில லாரி ஓட்டுநர் போக்குவரத்து காவலரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இங்குள்ள மக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டைகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிற வேளையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share