கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளில் 25 சதவிகிதப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனாவின் தாக்கத்தால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் வராத காரணத்தால் தொலைதூரம் செல்லும் விரைவு பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. பேருந்துகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையிலேயே வெளியூர்களுக்குச் சென்று வருகின்றன.
சில வழித்தடங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்கின்றனர். தொலைதூர தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் பயணம் செய்தால் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் என்ற பயம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் ஏசி பஸ்களிலும் கூட்டமில்லை.
பயணிகள் வராததால் தொலைதூர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கணிசமான அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளில் 25 சதவிகிதப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பயணிகள் வரத்து குறைவாக இருந்தால் அதற்கேற்ப முடிவு செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பயணிகள் வருகை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் வராததால் தனியார் போக்குவரத்து உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர்.
இதற்கிடையே தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட தனியார் பேருந்து போக்குவரத்து உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவித்துள்ளனர். பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும். பேருந்துகள் மீதான வரி சேவைகளையும் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்**
.�,