~தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்குமா?

public

இந்தியாவில் விளை நிலங்களில் வெட்டுக்கிளிகள் திடீரென ஆக்கிரமித்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் அடுத்த சோதனையாக வெட்டுக்கிளி ஆக்கிரமிப்பு தொடங்கியிருக்கிறது. ஐநாவின் உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்தது போலவே, தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள், விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சௌமித்ரா தஸ்குப்ட இதுகுறித்து கூறுகையில், ”இந்த பூச்சி தாக்குதல் வழக்கமான ஒன்று என்றாலும் இந்த முறை மிகப் பெரிய அளவில் வந்திருப்பதாகவும், இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் இந்த முறை ஏற்கனவே நாம் வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில் இது மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது ஒரு மோசமான காலம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுக்குமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெட்டுக்கிளி பல்வேறு பயிர்களைப் படையாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்ச்சியாகச் சூழலுக்கு ஏற்றவாறு தனது டிஎன்ஏவை தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. உணவு அதிகமாக கிடைக்கும் காலம், தங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டுதான், இவை முட்டையிலிருந்து இளம் உயிரியாகப் பிரிந்து, முதிர் உயிரியாக மாறி இனப்பெருக்கம் செய்து பயணிக்கின்றன. தொடர்ச்சியாகச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் இருப்பதாலேயே இவற்றைக் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.

இதன் ஆயுட்காலம் 6 முதல் 8 வாரங்கள் ஆகும். தனது ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இலைகளுக்குக் கீழ் பகுதியில் மட்டுமின்றி ஈரமான மண் தரையிலும் முட்டையிடக் கூடியது. அறுவடைக்குத் தயாராக விளைந்து கிடக்கும் வேளாண் பரப்பு எங்கு உள்ளது என்பதை அறிந்து காற்றின் திசையில் பயணிப்பதால் இவற்றால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகவும் அதிகம்.

பாலை வனப் பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இவை உருவாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரேநளில் 80 ஆயிரத்து 500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது ஒரு நாளில் 35 ஆயிரம் மனிதர்கள் உண்ணும் உணவிற்குச் சமமாகும்.

கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் நோக்கிப் புலம்பெயரத் தொடரும் என்றும் இவை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பானது, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வரும். ஆனால் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும் இந்தியாவின் மத்திய பகுதியான மத்தியப் பிரதேசத்தின் பண்ணா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் திசை காரணமாக வந்துள்ளது. சரியாக 26 ஆண்டுகள் கழித்துக் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் நிகழ்ந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நடப்பு ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 6 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும் இதனால் ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை. எனவே வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.

எனினும் , வெட்டுக்கிளிகளின் நகர்வை மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

ஒருவேளை வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி அவற்றைக் கட்டுப்படுத்தலாம் எனவும் சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

அதன்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் சார்ந்த பூச்சிக்கொல்லிகள் மருந்தினை பயன்படுத்தலாம். மாலத்தியான் மருந்தினை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மற்றும் தீயணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர்வினை உயிர் பூஞ்சாணத்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வெட்டுக்கிளிகளைச் சாப்பிடும் கோழி மற்றும் பறவைகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

**-கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *