தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்டு 29) கொரோனா தொற்றுப் பரவல் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுக்க பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இ பாஸ் நடைமுறையும் தொடரும் என்று முதல்வர் சொல்லி வருகிறார். இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று முதல்வர் கூட்டியுள்ள ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே கர்நாடகா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில் தமிழகத்தில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஆட்சியர்களின் கூட்டம், அதையடுத்து இன்று மாலை மருத்துவ நிபுணர்களின் கூட்டம் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிகாட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர். இதனைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.
அப்போது, ஊரடங்கை நீட்டிக்கலாமா, மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்தும், இ-பாஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கிராமங்கள் வரை கொரோனா தாக்குதல் பரவி வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த இரண்டு கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு இதேபோல நீடிக்குமா? அல்லது இ பாஸ், பொதுப் போக்குவரத்தில் தளர்வுகள் வருமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
**-வேந்தன்**�,