iசென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா?

Published On:

| By Balaji

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான பலி எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 1,415 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 31,896ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் இன்று (ஜூன் 15) கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் பாதிப்பு குறையும். 144 தடை உத்தரவு நடைமுறையில்தான் இருக்கிறது. இ-பாஸ் வழங்குவதில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை, மக்கள் விழிப்புணர்வில்தான் குறைபாடு உள்ளது. ஊரடங்கு தளர்வு விதிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்ற கேள்விக்கு, “இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஆலோசித்த பிறகு முதல்வர் இதுதொடர்பாக அறிவிப்பார்” என்று பதிலளித்தவர், “சென்னை வந்து செல்வோரை தடுக்க முடியாது. அவர்கள் ஏதாவது வேலை காரணமாக வந்துவிட்டு திரும்புவராக இருக்கலாம்” என்று கூறினார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share