ஊரடங்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 5 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 27) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஊரடங்கு மூலமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசும், அதை அப்படியே பின்பற்றிய மாநில அரசும் நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருப்பதை கையறு நிலையில் வேடிக்கை பார்ப்பதாகவே தெரிகிறது” என்று குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக தொழிலாளர்களும், சுய தொழில் செய்வோரும், போக்குவரத்து வாய்ப்பு இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்வாதாரத்திற்கு வழியின்றியும் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,
“ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாயும், அதற்கடுத்து சில பகுதியினருக்கு 1000 ரூபாயும் அறிவித்த மாநில அரசு தன் முழு கடமையும் முடிந்து விட்டதாக, அதன்பிறகு கண்டு கொள்ளவே இல்லை. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற ரேசன் பொருட்களும் கூட இந்த காலத்தில் விலையில்லாமல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொருட்களையும் விலையின்றி வழங்குவதற்கும் முன்வர வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ஆறு மாத காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூபாய் 7,500/- வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மக்களுக்கு கடும் சிரமத்தை அளித்துள்ளது. அதேசமயம் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்படுமானால் நோய்ப்பரவல் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளதாகக் குறிப்பிட்டதோடு, எமக்குத்தெரியும் என்கிற அதிகாரத்தோரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கோ, மக்கள் வாழ்வாதாரப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கோ இயலவில்லை. இந்த தோல்விகளுக்கு முழுமையாக மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், “மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, வேலை – வருமானத்தை பெற்றிட, ஊரடங்கை தளர்த்துவது, மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு தெளிவான முடிவுகளை மேற்கொள்ள அனைத்துக்கட்சி தலைவர்களது கூட்டத்தினை கூட்டி விவாதித்து, முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,