மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளைப் பின்பற்றி மாநில அரசும் தளர்வுகளைப் பின்பற்றிய நிலையில், மக்கள் இந்தத் தளர்வுகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை நேற்று தமிழகம் கண்கூடாகப் பார்த்தது.
திருச்சி, சென்னை, நெல்லை, கடலூர், பண்ருட்டி என்று பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை நேற்று கடைகள் திறக்கப்பட்டதையொட்டி மக்கள் டூவீலர்களிலும், கார்களிலும் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டு சாலைகளை பழையபடிக்கு அடைத்துக்கொண்டிருந்தனர். மே 17 வரை ஊரடங்கு தொடர்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருந்தது இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது.
ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளையும் பின்பற்றாமல் மக்கள் பெருமளவில் வீதிகளில் திரண்டதால்தான், மீண்டும் இது சமூகத் தொற்றுக்கு வித்திடுமோ என்ற அச்சமே ஏற்பட்டுள்ளது.
“நேற்று ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி மாநகர் முழுவதும் வாகன நெரிசலும் பொது மக்களின் இயல்பான புழக்கமும் அதிகரித்துள்ளது. இது கொரோனா தொற்றுக் காலம் என்பதை மறந்து பொது மக்களின் இயல்பான போக்குவரத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் காய்கறி சந்தைக்குக் கெடுபிடிகளை கொண்டு வந்ததுபோல் இனிவரும் நாட்களிலும் பொது போக்குவரத்துக்கும் கெடுபிடிகள் தேவை” என்கிறார் திருச்சி பத்திரிகையாளர் சண்முக வடிவேல்.
“3ஆவது கட்டம் என்னும் சமூகத் தொற்று நிலைக்கு வந்துவிட்ட சென்னையில் தளர்வு என்கிற பெயரில் ஜனங்களைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்காமல் பரவல் அதிகரித்துள்ள வேளையில் வறுமைக்கும், கிருமிக்கும் இடையே போராட விட்டுள்ளார்கள். இதன் விளைவு, மேற்சொன்ன எல்லாவற்றையும்விட மோசமாக இருக்கப் போகிறது” என்று எச்சரிக்கிறார் சமூக ஆர்வலர் உஸ்மான் கான்.
எங்கே செல்லும் இந்தப் பாதை?
**-வேந்தன்**�,