டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க புது மூவ்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் கரை வேட்டிகளிடத்திலும் பொதுமக்களிடமும் விவாதிக்கப்படும் ஒரே கேள்வி… உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பதுதான்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நடத்தி முடித்து அதில் வெற்றி பெற்று, அதை தன்னுடைய தனிப்பட்ட முழுமையான வெற்றியாகப் பிரகடனப்படுத்திக்கொள்ள தயாராகிவிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றிபெறச் செய்து அதன்மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவதுதான் அவரது அதிரடித் திட்டம். அதனால் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுகவும் இன்னும் சிலரும் தொடுத்துள்ள வழக்குகளில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேலும் அவகாசம் கேட்டிருக்கிறது. நவம்பர் 18ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, ஒன்பது மாவட்டங்களுக்கு இன்னும் வரையறை பணிகள் முடியவில்லை என்று கூறியது தேர்தல் ஆணையம். இதைக் காரணம் காட்டி டிசம்பர் இரண்டாவது வாரம் வரைக்கும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு அவகாசம் வாங்கியுள்ளது. ஆக, தேர்தல் என்பது பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி முதலமைச்சருக்கு ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். இதன்படி அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பணமும் பொங்கல் பரிசும் அறிவிக்கப்படும். அந்தப் பரிசுத் தொகையை அந்தந்த உள்ளாட்சி அதிமுக வேட்பாளர்கள் மூலம் ரேஷன் கடைகள் வழியாக வழங்க வைத்து அரசு பணத்தை அதிமுகவின் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்துவதுதான் அந்த உத்தி. இந்தத் தகவல், ‘உள்ளாட்சித் தேர்தல் பொங்கலுக்கு முன்பா பின்பா?’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தியாக ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படி அதிமுக தெளிவாகத் திட்டமிட்டு அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறத் தயாராகிறது. மேலும் மேயர், நகராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்காமல் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் திட்டமும் அதிமுகவின் வசதிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட அமைச்சரும் தத்தமது மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்றுவதற்கு இப்போதே பண வியூகம் உட்பட பல்வேறு வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டனர். அமைச்சர் தங்கமணியின் லிமிட்டில் உள்ள நகராட்சிகளில் ஓர் ஓட்டுக்கு 1,000 ரூபாய் வழங்கவும் தயாராக இருப்பதாக நாமக்கல் மாவட்ட திமுகவினர் தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அது ஆளும்கட்சியினருக்கு ஆதரவான தேர்தலாகவே இருக்கும் என்று கருதுகிறது திமுக. அப்படி ஒரு முடிவு வந்தால் ஸ்டாலினின் இமேஜுக்கும் அது பெருத்த அடியாக இருக்கும். ஆனால், இதை சொன்னால் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அதிமுகவினர் குற்றம்சாட்ட தொடங்கிவிடுவார்கள். ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனதற்கு காரணம் திமுக போட்ட வழக்குதான் என்று அதிமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், அது திமுகவின் பெயரில் இருக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் இப்போதைய திட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக உறுப்பினர் அல்லாத இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மாவட்ட கலெக்டர், டிலிமிடேஷன் அலுவலர், மாநிலத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் உள்ளிட்ட ஏழு அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்றம் வகுத்துக்கொடுத்த நெறிமுறைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இதுவரை பின்பற்றவில்லை. வார்டு வரையறையில், பெண்கள் ஒதுக்கீட்டில் ஏகப்பட்ட முரண்பாடுகள் நிலவுகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்களின் வரையறையும் அவசர அவசரமாகச் செய்யப்படுகிறது. எல்லாமே ஆளுங்கட்சிக்கு ஆதரவான முறையிலேயே செய்யப்படுகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போதைய வரைமுறையின்படி நடத்தக் கூடாது என்பதுதான் அந்த புகார் மனுவின் சாராம்சம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக உறுப்பினர் அல்லாத இருவர் மூலம் இந்த மனுக்கள் அனுப்பப்பட்டு அதன் நகலும், ஒப்புகைச் சீட்டுகளும் சேகரிக்கப்பட்டு திமுகவின் முக்கிய வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. அவர் மூலம் இன்னொரு வழக்கறிஞருக்கு கை மாற்றப்படும்.

அனைத்து மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட மனுக்களையும் தொகுத்து உள்ளாட்சித் தேர்தலை தற்போதைய நிலையில் நடத்தக் கூடாது என்று வாக்காளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும். இதில் ஆர்.எஸ்.பாரதியோ, திமுக தொடர்பான வேறு யாருமே இருக்க மாட்டார்கள். இதற்கான பணிகள் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு விட்டன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share