~உள்ளாட்சித் தேர்தல்: கேபினட்டில் நடந்தது என்ன?

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (நவம்பர் 19) காலை கூடியது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்ட இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இப்போது இருக்கும் மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவருவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றிய மாநில அமைச்சரவையின் முடிவு இன்னும் முறைப்படி வெளியாகவில்லை என்றாலும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன் சக அமைச்சர்களிடம் பேசிய முதல்வரின் கருத்துகளில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக விரும்பவில்லையோ என்ற தொனி தென்படுகிறது என்கிறார்கள் அமைச்சர்கள் தரப்பில்.

இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவது என்ற முடிவில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருப்பது முதல்வர் எடப்பாடிதான். அவரிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி போன்றோர் சில யோசனைகளை சொன்னபோதும் கூட உடனடியாக நடத்தி முடித்துவிட வேண்டுமென்றே எடப்பாடி சொல்லியிருக்கிறார்.

நவம்பர் 6 ஆம் தேதி நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், ‘ இந்த தேர்தல்ல நம்ம பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. பெண்கள் இட ஒதுக்கீடு போக மிச்சமிருக்கிற இடங்கள்ல போட்டியிடுவதுல நமக்கே நிறைய போட்டிகள் இருக்கு. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் போது இன்னும் பல சிக்கல்கள் வரும். நம்ம கட்சியிலேயே என் ஆதரவாளர் உன் ஆதரவாளர் என்ற பேச்சும் வரும்.

இதையெல்லாம் வச்சு என்னோட தனிப்பட்ட கருத்து என்னன்னு கேட்டா சட்டமன்ற தேர்தலில் நாம ஜெயிக்கணும்னா உள்ளாட்சித் தேர்தலை எப்பாடுபட்டாவது சட்டமன்ற தேர்தல் வரைக்கும் ஒத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சிகளுக்கும் நமக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எதிர்க்கட்சியினர் பெரிசாக்கி சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கு. இது என்னோட தனிப்பட்ட கருத்து என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அப்போது கூட எடப்பாடி இதற்கு எதுவும் சொல்லவில்லை.

ஆனால் மாவட்டப் பிரிப்பு அரசாணை, புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம் என உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாகவே இருந்தார். ஆனால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் பேசிய முதல்வரின் பேச்சு வேறு மாதிரி இருந்திருக்கிறது.

‘கூட்டணிக் கட்சிகளை அட்ஜஸ்ட் பண்ணி உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா ஒவ்வொருத்தரும் கேட்குறதப் பார்த்தா நமக்கே நாப்பது பர்சண்ட் இடம்தான் போட்டியிடவே கிடைக்கும்போலிருக்கு. கட்சியில இருக்கிற அடிமட்ட நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்குறதுக்குதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துறோம். ஆனா, நம்ம கட்சிக்காரங்களுக்கு அதிக பலன் இல்லைன்னா, இப்ப எப்படி நடத்த முடியும்? நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர்” என்கிறார்கள்.

தொடர்ந்து பேசியவர்கள், “முதல்வரின் இந்த மனமாற்றத்தை அடுத்துதான் மேயர், நகராட்சித் தலைவர் தேர்வுக்கு மறைமுகத் தேர்தல் என்று நேற்று மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அரசாணை வெளியிட்டால் அதற்குரிய நிர்வாக நடைமுறைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவைப்படும். அதை வைத்தே உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடும் மூடுக்கு வந்துவிட்டார் முதல்வர்” என்பதுதான் கோட்டை வட்டாரத்தின் தகவல்.

அதேநேரம் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்கிற முக்கியமான இடம். அங்கே விவாதிக்கப்படுகிற விஷயங்கள் முறைப்படி அரசின் அறிவிப்பாகத்தான் வெளியிடப்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால் முடிவு வெளியிடப்படும் முன்னரே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவிப்பது அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றி கருத்து வேறுபாடுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share