உள்ளாட்சித் தேர்தல்: அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலை தேதியை அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதெல்லாம், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியின் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலை நடத்தவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில் அக்டோபர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்பது, சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் என உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன. இன்று காலை கூட செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிடும் எனக் கூறியிருந்தார்.

இருப்பினும் [தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?](https://minnambalam.com/k/2019/10/23/19/local-body-election-exapted-in-Postponed) என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட செய்தியில், உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க அவகாசம் கோரியுள்ளது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

அதாவது, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 24) மனுதாக்கல் செய்துள்ளது. அதில், “மஹராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் மற்ற இடங்களில் இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்போது அனுப்பப்படும் என்ற உறுதியான தகவல் எங்களுக்கு வரவில்லை. எனவே எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்று உச்ச நீதிமன்றம் ஒருவேளை அவகாசம் வழங்கும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும். ஆனால், ஏற்கனவே நிறைய அவகாசம் அளித்துவிட்டோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டாலோ அல்லது குறைந்த அளவிலான கால அவகாசத்தை வழங்கினாலோ டிசம்பர் மாதத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share