போக்குவரத்தை கட்டுப்படுத்த சிறப்புபடை: நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Balaji

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். இது பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய பிரச்சினையாகும். அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம், ஆமைவேகத்தில் வாகனங்கள் எல்லாம் ஊர்ந்து செல்லும். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையின் முக்கிய சாலையான ஜிஎஸ்டி சாலையில், உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இந்த நிறுவனங்களின் முன் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டை புதுவை நகர் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று (நவம்பர்19) நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு (Police Commissioner) உத்தரவிட்டார்.மேலும் வணிக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்த காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது. விதிமீறும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதி அறிக்கை அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share