எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியான நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழலையர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் குழந்தைகளுக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றாலும் நேற்று மாலை எல்.கே.ஜி., யு.கே.ஜி. பள்ளி மாணவர்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் , அந்த விடுமுறை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், சுகாதாரத் துறையுடன் ஆலோசித்த பிறகு மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தரப்பில் இன்று காலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்மூலம் குழந்தைகளின் பெற்றோர் குழப்பமடைந்த நிலையில், கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும். இதில் எந்தவித குழப்பமும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைன் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு படிக்கும் மழலையர்களுக்கு அறிவிக்கப்பட்டபடி மார்ச் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ”அரசுத் தரப்பிலிருந்து ஒவ்வொருவரும், ஒவ்வொரு பதிலைக் குழந்தைகள் போல் மாறி மாறி கூறிவருகின்றனர். இதனால் குழப்பமாக இருக்கிறது. விடுமுறையா? இல்லையா? என்பது குறித்து முறையான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
**கவிபிரியா**�,