தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளதால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுபான வகைகளை வர்த்தகம் செய்யும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அரசு நிறுவனமாகும். இந்நிறுவனம் மூலம் மதுபான வகைகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் நிறுவனங்களின் டாஸ்மாக் முதன்மையானது.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மதுபானங்களின் விற்பனை விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மதுபானங்களின் புதிய விலை பட்டியலை இன்று காலை 8 மணியளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், நேற்றைய இருப்பு பட்டியலை, இன்று மதியத்திற்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல்படி விற்பனை செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று காலை 12 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாயும்,
மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாயும்,
ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரக மதுபானங்களுக்கு 20 ரூபாயும்,
மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாயும்,
புல் பாட்டிலுக்கு சாதாரண ரக மதுபானங்களுக்கு 40 ரூபாயும்,
மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாயும்,
பீர் வகைகள் விலை 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அமலுக்கு வந்துள்ள மதுபானங்களின் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், தினந்தோறும் மதுவகைகளால் 10.35 கோடி ரூபாயும், பீர் வகைகளால் 1.76 கோடி ரூபாயும் என கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**