புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்தா? திமுகவுக்கு எதிராக மதிமுக!

Published On:

| By Balaji

விடுதலைப் புலிகளை மையமாக வைத்து திமுகவுக்கும்,திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கும் உரசல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு (ராகுல், ப்ரியங்கா, வதேரா) அளித்து வந்த பாதுகாப்பைக் குறைத்தது. நேற்று (நவம்பர் 19) மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர்.

அவர்களோடு சேர்ந்து இதுபற்றிப் பேசிய மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “ சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற அடிப்படையில் மத்திய அரசு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்திருக்கிறது. ஆனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதை மத்திய அரசே சொல்லியிருக்கிறது.

மத்திய அரசு கடந்த மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், ‘விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அமைப்பு தொடர்ந்து இந்திய எதிர்ப்பு தோரணையை பின்பற்றுகிறது. அந்த அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு ஆபத்து இருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. சோனியா காந்தியும் ஓர் இந்திய பிரஜைதான். எனவே அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தொடர வேண்டும். எங்களை இதுபற்றி தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லையென்றால் நாங்கள் வெளிநடப்பு செய்து போராடுவோம்” என்று கூறிவிட்டு வெளி நடப்பு செய்தார்.

சோனியாவின் பாதுகாப்பு தேவைதான். ஆனால் அவருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி டி.ஆர்.பாலு பேசியதற்கு மதிமுகவினர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.

சமூக தளங்களில் இன்று இது தொடர்பாக மதிமுகவினர் டி.ஆர்.பாலுவுக்கு எதிரானக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “ தன்னுடைய உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்று கருணாநிதி சொன்னதன் விளைவுதான் மதிமுக உருவானது. இன்று, புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து என்கிறார் திமுகவின் டி.ஆர்.பாலு. ஆனால் மதிமுகவும் திமுகவும் இன்று ஒரே அணியில். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாம்பு பாம்புதான். விசம் விசம்தான். அன்று புலிகளுக்காக, தான் உயிராக மதித்த தலைவர் கருணாநிதியையே தூக்கி எறிந்த வைகோ, இன்று டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு என்ன எதிர்வினையாற்றப்போகிறார்? கொள்கைகளைப் புதைத்து, அதன்மீது நாற்காலியிட்டு அமர்வதால் எந்தப் பயனும் இல்லை” என்று சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share